புத்ராஜெயா, செப். 26- இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய விவசாயப் பொருள் சந்தை வாரியம் (ஃபாமா) 21 கோடியே 50 லட்சம் வெள்ளி மதிப்பிலான பாசார் தானி சந்தை விற்பனையை பதிவு செய்துள்ளதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்தார்.
நாடு முழுவதும் 229 இடங்களில் பாசார் தானி சந்தைகள் திறக்கப்பட்ட வேளையில் இதில் 5,618 தொழில்முனைவோர் பங்கேற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டுக்கான விற்பனை மதிப்பு இலக்கு சுமார் 33 கோடி வெள்ளியாகும். இதுவரை இந்த சாதனை இலக்கில் 65 சதவீதத்தை எட்டியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு தேசிய அளவிலான 40வது விவசாயிகள் சந்தை ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் பிரிசிண்ட் 4 விவசாயிகள் சந்தை திறப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விழாவில் கலந்து கொண்டு விவசாயிகள் சந்தையை துவக்கி வைத்தார்.
இந்த சாதனை தொழில்முனைவோரின் முயற்சியின் விளைவாக மட்டுமல்லாமல் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதிலும் விவசாயிகள் சந்தைகளின் வரம்பை விரிவுபடுத்துவதிலும் பல்வேறு தரப்பினருடனான விவேக ஒத்துழைப்பு மூலம் ஃபாமா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாகும் என்று முகமது சாபு கூறினார்.
விவசாயிகளுக்கு சிறந்த சந்தையை வழங்குவதோடு மக்கள் நியாயமான விலையில் உணவுப் பொருள்களைப் பெற உதவுவதில் பாசார் தானி விவசாயிகள் சந்தைகள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
அறிமுகம், வலுப்படுத்துதல், நவீனமயமாக்கல் முதல் இன்றைய மாற்றம் மற்றும் புதுமை வரை உள்ளூர் வேளாண் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளமாக பாசார் தானி விவசாய சந்தைகள் ஆற்றலை தங்கள் திறனை நிரூபித்துள்ளன என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு ஆகஸ்டு வரை வெ.21.5 கோடி விற்பனையை ஃபாமா பதிவு செய்தது
26 செப்டெம்பர் 2025, 6:31 AM