புத்ராஜெயா, 26 செப்: பெட்ரோல் சலுகைத் திட்டமான RON95 பெட்ரோல் மானியத் (BUDI95) சர்வர் அமைப்பு, ஒரு நிமிடத்திற்கு 30,000 பரிவர்த்தனைகளை செயலாக்கும் திறன் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த மேம்பட்ட திறன், முன்னர் RM100 அடிப்படை ரஹ்மா உதவி தொகை (சாரா) திட்டத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சியாகும் என அவர் கூறினார்.
சாரா திட்டம் சிறிய குழுவுக்கு அமையப்பெற்றது. அப்போது அது ஒரு நிமிடத்திற்கு 3,000 பரிவர்த்தனைகள் மட்டுமே செயலாக்கியது. ஆனால் இப்போது BUDI95 சர்வர் திறன் 10 மடங்கு அதிகம், அதாவது 30,000 பரிவர்த்தனைகள் செய்ய முடியும் என்று நிதி அமைச்சு மாதாந்திரச் கூட்டத்தில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.
மேலும், RON95 சலுகையின் குறிக்கோள் என்பது MADANI அரசின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது; இதன் மூலம் RON95-இன் கசிவு மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க முடியும். அதேசமயம், மக்களின் நலனும் காக்கப்படுகிறது என்றார் அவர்.
செப்டம்பர் 22ஆம் தேதி, RON95 விலையை RM2.05 லிட்டரிலிருந்து RM1.99 லிட்டராகக் குறைத்தது செப்டம்பர் 30 முதல் அமலுக்கு வருகிறது. தற்போது, முறயான ஓட்டுநர் உரிமம் கொண்ட அனைத்து மலேசியர்களும் இந்த சலுகையைப் பெற தகுதியானவர்கள். JPJ மற்றும் JPN தரவுகளின் அடிப்படையில், சுமார் 1.6 கோடி மக்கள் இந்த சலுகையைப் பெறுவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அடையாள அட்டையை பயன்படுத்தி பெட்ரோல் வாங்க வேண்டும் என்பதால் BUDI95 சிரமம் தரக்கூடும் என சிலர் கூறிய குற்றச்சாட்டுகளை பிரதமர் மறுத்துள்ளார்.