கோலாலம்பூர், செப். 26- மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (ஏ.பி.எம்.எம்.) தடுப்பு மையம் மற்றும் நாடு முழுவதும் உள்ள தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவன (ஏ.ஏ.டி.கே.) லாக்கப்களில் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா (சி.சி.டி வி.) அமைப்பை நிறுவ அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அமலாக்க நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருப்பதாக அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
நேற்றிரவு தாம் தலைமை தாங்கிய தேசிய நிர்வாகம் தொடர்பான அமைச்சரவை சிறப்புக் குழு கூட்டத்தின் 7வது தொடரில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.
பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் சட்ட அமலாக்க நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் தடுப்பு மையங்களில் கண்காணிப்பை வலுப்படுத்துவதிலும் தேசிய ஊழல் எதிர்ப்பு வியூகத்திற்கு ஏற்ப இந்த செயல்படுத்தப்படும் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அரசாங்க முயற்சியாகும் என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு மீன்பிடி படகுகள் நாட்டின் கடல் பகுதிகளில் ஊடுருவுவது தொடர்பான தொடர்ச்சியான சம்பவங்களை அரசாங்கம் கடுமையாக கருதுகிறது. இது நாட்டின் கடல்சார் இறையாண்மையை மீறுவது மட்டுமல்லாமல் நாட்டின் கடல்சார் பொருட்களின் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது. மேலும் உள்ளூர் மீனவர்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது என்று பிரதமர் சொன்னார்.
நாட்டின் கடல்சார் இறையாண்மைப் பிரச்சினையில் சமரசம் செய்யக்கூடாது என்ற அரசாங்கத்தின் அக்கறை மற்றும் நிலைப்பாடு காரணமாக மலேசியாவிற்கும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் இடையிலான விவேக ஒத்துழைப்பு மூலம் மாநில கடல் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூட்டம் ஒப்புக்கொண்டதாக அன்வார் கூறினார்.
ஏ.ஏ.டி.கே. லாக்கப், ஏ.பி.எம்.எம். முகாம்களில் உயர்தொழில்நுட்ப சி.சி.டிவி.- அரசு ஒப்புதல்
26 செப்டெம்பர் 2025, 3:36 AM