பெட்டாலிங் ஜெயா, செப். 26- கம்போங் செம்பாக்கா மற்றும் கம்போங் சுங்கை ஆராவில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள 1 கோடியே 60 லட்சம் வெள்ளிக்கும் அதிகமானத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை மேற்கொண்டுள்ள 1.3 கிலோமீட்டரை உள்ளடக்கிய காயு ஆரா நதியை அகலப்படுத்தும் திட்டம் இப்போது இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்துள்ள வேளையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அப்பணிகள் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
இரண்டு மணி நேரத்திற்கு 103 மில்லிமீட்டர் வரை அதிக மழை பெய்ததே வெள்ளத்திற்கான காரணம் என ஜே.பி.எஸ். அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமல்படுத்தப்படும் திட்டம் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை நேரில் காண குடியிருப்பாளர்களையும் நாங்கள் அழைக்கிறோம் என்று அவர் கூறினார்.
விளக்கமளிப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் பண்டார் உத்தாமா சமூக சேவை மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கம்போங் செம்பாக்கா மற்றும் கம்போங் சுங்கை ஆராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 27 பேருக்கு நிதியுதவி மற்றும் உணவு கூடைகளை ஜமாலியா வழங்கினார்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பகுதியில் 60 மில்லி மீட்டருக்கும் மேல் மழை பெய்தால் சுற்றியுள்ள பகுதியில் 0.45 மீட்டர் உயரம் வரை வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று பெட்டாலிங் மாவட்ட ஜே.பி.எஸ். பொறியாளர் மைமுனா அபு ஹசன் அஷாரி விளக்கினார்.
அடை மழை தவிர, சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சியும் வெள்ளப்பெருக்குக்கு காரணமாக அமைந்தது. வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் முதல் கட்டம் கடந்த நவம்பரில் நிறைவடைந்தது. இரண்டாவது கட்டத்தில் இரண்டு மீட்டர் உயர தடுப்புச் சுவர், பம்ப் நிலையம் மற்றும் சாலை அமைக்கும் பணி இடம்பெற்றது.
அப்பணிகள் முடிந்ததும் தண்ணீர் உயரும் அபாயம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சைரன்களை நிறுவுவது சிறந்த பலனைத் தரும் என்று அவர் கூறினார்.
செம்பாக்கா, சுங்கை ஆராவில் வெ.1.6 கோடி செலவில் வெள்ளத் தடுப்புத் திட்டம்- 2026 ஜூன் மாதம் பூர்த்தியாகும்
26 செப்டெம்பர் 2025, 2:38 AM