பெட்டாலிங் ஜெயா, செப். 26- சிலாங்கூரில் உள்ள அனைத்து வர்த்தக வளாகங்களிலும் மூன்று நாள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டுத் தடை அமலாக்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விதிமுறைகள் மற்றும் உத்தரவுக்கு இணங்காததற்கான அபராதங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த சட்டம் உள்ளடக்கும் என்று பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்த தடையை மாநில மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் சட்டத்தை வரைந்து வருகிறோம்.மலாய் மொழியில் வரைவு முடிக்கப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது இன்னும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். இதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.
அதனைத் தொடர்ந்து தடையை இறுதி செய்ய ஒரு கூட்டத்தை நடத்துவோம். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த செயல்முறை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
பிளாஸ்டிக் பை கட்டணத்தைப் பொறுத்தவரை, மாநில அரசு அதனை 50 காசு அல்லது 1.00 வெள்ளியாக உயர்த்தலாமா என்று முடிவு செய்யவில்லை. இந்த அதிகரிப்பு அதிக மக்களுக்கு சுமையாக இருக்குமா என்பதை நாங்கள் இன்னும் ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு சுங்கை காயு ஆரா வெள்ளத் தணிப்புத் திட்டம் குறித்த விளக்கக் கூட்டம், கம்போங் செம்பக்கா மற்றும் கம்போங் சுங்கை ஆராவில் 27 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு ஜமாலியா செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
அடுத்த ஆண்டு முதல் சிலாங்கூரில் உள்ள
அனைத்து வளாகங்களிலும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள் பிளாஸ்டிக் பை தடை அமலுக்கு கொண்டுவரப்படும் என்று ஜமாலியா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.
புதிய வழிகாட்டுதல்களை தயாரித்தல் மற்றும் அரசிதழில் வெளியிடுதல் உள்ளிட்ட அமலாக்கச் சட்டத்தின் இறுதி மறுஆய்வு கட்டத்தில் மாநில சட்டத் துறை இருப்பதாக அவர் கூறினார்.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாநில அளவில் தடை- ஆண்டு இறுதியில் முடிவு செய்யப்படும்
26 செப்டெம்பர் 2025, 1:20 AM