கிள்ளான், செப். 25 - போர்ட் கிள்ளான், பூலாவ் இண்டா தொழிலியல் பூங்கா குடியிருப்பு வளாகத்தில் சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறை தலைமையில்
நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட
ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 662 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
இரவு 9.30 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில் 1,132 வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் கைருல் அமினஸ் கமாருடின் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் அதாவது 545 பேராக உள்ளதாகக் கூறிய அவர், அதற்கு அடுத்த நிலையில் மியான்மர் (36), பாகிஸ்தான் (35), நேபாளம் (24), இந்தியா (10) மற்றும் இந்தோனேசியா (9) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்றார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மீறியது கண்டறியப்பட்டது. அவற்றில் ஆவணங்கள் காலாவதியானது, அதிக காலம் தங்கியது, செல்லுபடியாகும் அனுமதிகள் இல்லாதது மற்றும் அனுமதி நிபந்தனைகளை மீறியது ஆகியவை அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
பதினாறு முதல் 80 வயதுடைய அனைத்து கைதிகளும் கூடுதல் சோதனைகளுக்காக சிலாங்கூர் குடிநுழைவுத் துறை தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு பின்னர் செமினி குடிநுழைவு முகாமிற்கு மாற்றப்பட்டனர்.
குடியேற்ற விதிமுறைகளை மீறும் வெளிநாட்டினரைக் கண்டறிந்து நாடு கடத்தும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்பதோடு 2007 ஆம் ஆண்டு ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் உள்ள விதிகளின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கைருல் அமினஸ் கூறினார்.
இந்த நடவடிக்கையின்போது அதே வளாகத்தின் மூன்றாவது மாடியில் விபச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வீடும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இருப்பினும், சிசிடிவி பொருத்தப்பட்ட அந்த வளாகம் காலியாகக் காணப்பட்டது என அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் கோலாலம்பூர், பேராக், நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த குடிநுழைவுத் துறைகளோடு சிலாங்கூர் காவல்துறை, புக்கிட் அமான் வான் நடவடிக்கைப் பிரிவு மற்றும் பொது நடவடிக்கைப் படையும் ஈடுபட்டன.
போர்ட் கிள்ளானில் குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனை - 662 அந்நிய நாட்டினர் கைது
25 செப்டெம்பர் 2025, 9:15 AM