ஷா ஆலம், செப், 25 - நாட்டில் தமிழ் ஊடகத் துறைக்கு பெரும் பங்காற்றிய பத்து மூத்த பத்திரிகையாளர்கள் சிலாங்கூர் மாநில அரசு சார்பில் கெளரவிக்கப்படவுள்ளனர்.
தகுதி உள்ள மூத்த பத்திரிக்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை அரசிடம் பரிந்துரைக்கும் பொறுப்பு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார்.
விரைவில் நடைபெறவிருக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்து கட்டணம் வழங்கும் நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்களையும் சிறப்பிக்கும் பிரத்தியேக அங்கம் இடம் பெறும் என்று அவர் மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் சொன்னார்.
கடந்தாண்டு நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்து கட்டணம் வழங்கும் நிகழ்வில் நான் அறிவித்தபடி இவ்வாண்டு மூத்த பத்திரிகையாளர்களை கெளரவிக்கவிருக்கிறோம்.
பத்திரிகையாளர்கள், குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் குருமார்களுக்கு சமமானவர்கள். அவர்கள் சமுதாயத்திற்கும் தமிழ் மொழிக்கும் அளப்பரிய பங்கினை ஆற்றி வருகின்றனர். அதன் அடிப்படையில் கடந்தாண்டு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை கெளரவித்தது போல் இம்முறை பத்திரிகையாளர்களை கெளரவிக்கவிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு மூத்த பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரத்தையும் இளம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பாகச் செயல்படுவதற்குரிய உத்வேகத்தையும் வழங்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் அரசு சார்பில் 10 மூத்த பத்திரிக்கையாளர்கள் கெளரவிப்பு- பாப்பாராய்டு தகவல்
25 செப்டெம்பர் 2025, 9:02 AM