நியூயார்க், செப். 25 - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப்பேரவையில் கலந்து கொண்டபோது தனக்கு எதிரான "சதிநாசவேலை" என விவரிக்கப்படும் சம்பவங்களை உளவுத் துறை விசாரித்து வருவதாக அதிபர் டோனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.
மின்படிகட்டுகள் பாதியில் நின்றது, டெலிப்ராம்ப்டர் எனப்படும் எழுத்து வடிவ உரை தோன்றும் திரை செயலிழப்பு மற்றும் ஒலி பிரச்சனைகள் காரணமாக அந்த உலக அமைப்பில் தனது முந்தைய நாள் வருகை பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
தன்னையும் தனது மனைவி மெலனியாவையும் சுமந்து சென்ற மின்படிகட்டு பிரதான தளத்திற்குச் செல்லும் வழியில் "கீச்சிடும் சத்தத்துடன் நின்றுவிட்டது" என்றும் இதனால் தாங்கள் கிட்டத்தட்ட கீழே விழும் சூழல் ஏற்பட்டதாவும் கூறிய அவர், இதற்கு பொறுப்பானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், தனது உரையின் தொடக்கத்தில் டெலிப்ராம்ப்டர் திரை இருண்டுவிட்டது என்றும் ஒலி அமைப்பு செயலிழந்ததால் மண்டபத்தில் இருந்த உலகத் தலைவர்களால் தனது பேச்சைக் கேட்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
"ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று மிகவும் மோசமான நிகழ்வுகள்!" என்று டிரம்ப் அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.
நகரும் மின் படிக்கட்டின் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறை தூண்டப்பட்டதாகவும் டெலிப்ராம்ப்டரை வெள்ளை மாளிகை இயக்கியதே தவிர தாங்கள் அல்ல என்றும் ஐ.நா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வுகளின் தொடரை "மூன்று சதிநாசவேலை" என்று வர்ணித்த டிரம்ப், பாதுகாப்பு கேமரா காட்சிகளைப் பாதுகாக்கும்படி ஐ.நா.விடம் கேட்டுக் கொண்டதோடு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினார். மேலும் இந்த விஷயத்தை உளவுத் துறை விசாரித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
ஐ.நா. பேரவையில் எனக்கு எதிராக மூன்று சதிநாச முயற்சிகள் - டிரம்ப் குற்றச்சாட்டு
25 செப்டெம்பர் 2025, 7:54 AM