புத்ராஜெயா, செப் 25 - சிறார்கள் மத்தியில் போதைப் பழக்கம் தொடர்பான பிரச்சனை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. சிலர் 10 வயதிலேயே அதாவது தொடக்கப் பள்ளிப் பருவத்திலே போதைப் பழக்கத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.
சிறார்கள் மத்தியில் போதைப் பழக்கம் ஏற்படுவதற்கு , போதைப்பொருள் அடங்கிய மிட்டாய்களை இலவசமாக வழங்கும் வியாபாரிகளின் தந்திரங்களும் ஒரு காரணம்
என்று அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சனையைக் கட்டுப்படுத்த கல்வி அமைச்சு மற்றும் பாலர் பள்ளி அமைப்புகளுடன் நான் விவாதித்தேன்.
இந்த முயற்சிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகத்தின் ஒத்துழைப்பும் தேவை என்று அவர் அண்மையில் ஒரு சிறப்பு நேர்காணலில் கூறினார்.
போதைப்பொருள் கடத்தலை மிகவும் திறம்பட முறியடிப்பதற்கான முறைகள், தடுப்பு மற்றும் மறுவாழ்வு அம்சங்களை அறிவது உட்பட, இந்த குற்றச்செயலைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகப் போதைப்பொருள் தடுப்பு மீதான அமைச்சரவைக் குழுவின் தலைவருமான அவர் சொன்னார்.
இதன் அடிப்படையில் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் போன்ற அமலாக்க நிறுவனங்கள், குறிப்பாக போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் போக்குவரத்துச் சேவைகளைக் கண்டறிவதில் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
சில நேரங்களில் நாம் இணையத்தில் வாங்கிய பொருள் போன்ற ஒரு பொட்டலத்தைப் பார்க்கிறோம். ஆனால் அதன் உள்ளடக்கம் போதைப் பொருளாக இருக்கும்.
இந்த விஷயத்தில் அவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்கிறார்கள், மேலும் அமலாக்க மற்றும் மறுவாழ்வு நிறுவனங்கள் அவர்களை விட (போதைப் பொருள் விற்பனையாளர்கள்) மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், மலேசியாவில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் என்பது இனங்களுக்கிடையிலான பிரச்சனை என்றும், கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் அதிக போதை விகிதங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அகமது ஜாஹிட் தெரிவித்தார்.
இந்த போதைப் பொருள் குற்றம் உண்மையில் ஒரே மலேசிய கோட்பாட்டைக் கொண்டுள்ளது. இதில் பெரிய அளவிலான விநியோகஸ்தர்கள் சீனர்களாகவும் முறைபடுத்தப்பட்ட விநியோகஸ்தர்கள் இந்தியர்களாகவும் சில்லறை விற்பனையாளர்கள் மலாய்க்காரர்களாகவும் உள்ளனர் என்று அவர் கூறினார்.