மாட்ரிட், செப். 25 - கிரேக்கக் கடல் பகுதியில் ட்ரோன்களால் தாக்கப்பட்ட காஸாவிற்கு உதவி வழங்க முற்பட்டுள்ள அனைத்துலக சிறு கப்பல் அணியை பாதுகாக்க இத்தாலியுடன் இணைந்து ஒரு இராணுவப் போர்க்கப்பலை அனுப்பப் போவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நேற்று தெரிவித்தார்.
காஸா மக்களுக்கு உணவு வழங்கவும், அவர்களின் துன்பம் நிறைந்த தருணத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் 45 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் கப்பல் அணியில் இணைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவையில் கலந்து கொண்டப் பின்னர் நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சான்செஸ் கூறினார்.
அனைத்துலகச் சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்பதோடு மத்தியதரைக் கடல் வழியாக பாதுகாப்பான சூழ்நிலையில் பயணம் செய்வதற்கான நமது குடிமக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என ஸ்பெயின் அரசாங்கம் வலியுறுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
கடற்படைக்கு உதவுவதற்கும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் அவசியமானால், தேவையான அனைத்து வளங்களுடனும் கார்டகேனாவிலிருந்து ஒரு கடற்படைக் கப்பலை நாளை (இன்று) அனுப்புவோம் என அவர் சொன்னார்.
ஐம்பது சிவிலியன் படகுகளைப் பயன்படுத்தும் குளோபல் சுமுட் புளோட்டிலா, காஸாவில் இஸ்ரேலின் கடற்படை முற்றுகையை உடைக்க முயன்று வருகிறது. இதில் ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை பிரச்சாரகர் கிரேட்டா துன்பெர்க், 15 இயக்கவாதிகள் கொண்ட மலேசிய பணிக்குழு மற்றும் பல வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.
கிரேக்க தீவான காவ்டோஸிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் அனைத்துலக கடல் பகுதியில் 12 ட்ரோன்களால் கப்பல்கள் தாக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் மரிகைட்டி ஸ்டாசினோ தெரிவித்தார்.
ஒவ்வொரு இரவும் எங்கள் மீது ட்ரோன்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பணி இலக்கு காஸாவைப் பற்றியது.
இது எங்களைப் பற்றியது அல்ல. மேலும் பாலஸ்தீனர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் ஆபத்துகளுடன் ஒப்பிடுகையில் நாங்கள் எதிர்நோக்கும் ஆபத்து மிகவும் அற்பமானது என்று கப்பலிருந்து வீடியோ அழைப்பில் துன்பெர்க் கூறினார்.