அம்பாங் ஜெயா, செப் 25 - இங்குள்ள பங்சாபுரி பெரேம்பாங் இண்டாவில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மேற்கொண்ட சோதனையில் கொசுக்கள் வளரும் 16 இடங்கள் அடையாளம் காணப்பட்டதோடு நான்கு துப்புரவு அறிக்கைகள் மற்றும் ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள மூன்று குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டன.
மொத்தம் 145 குடியிருப்புகளை உள்ளடக்கிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்.) கோம்பாக் மாவட்ட சுகாதார இலாகா, அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகம், கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மேண்ட் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 120 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு கொண்டதாக நகராண்மைக் கழகத்தின் துணைத் தலைவர் ஹஸ்ரோல்னிசாம் ஷாரி கூறினார்.
வளாகங்கள் சுத்தமின்றி காணப்பட்டது, கிருமிகள் பரவும் அளவுக்கு கரப்பான் பூச்சிகள், ஈக்கள், எலிகளின் நடமாட்டம் மற்றும் டைபாய்டு ஊசி செலுத்தப்படாதது உள்ளிட்ட காரணங்களுக்காக வளாகங்களுக்கு ஏழு குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்று அவர் சொன்னார்.
அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஆறு உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு கொசுக்களின் பரவலைத் தடுப்பதற்காக ஏழு பழைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
டிங்கி பரவல் அதிகம் உள்ள இடமாக விளங்கும் இந்த குடியிருப்பு கடந்த 45 நாட்களில் ஏழு நோய்ச் சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் சுத்தத்தை உறுதி செய்வதில் நகராண்மைக் கழகம் அதிக தீவிரம் காட்டி வருகிறது என்றார் அவர்.
வாழ்க்கை முறை குறிப்பாக சுத்தத்தை பேணிக்காப்பதில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளே டிங்கி பரவலுக்கு காரணமாக உள்ளதால் இங்கு அதிக எண்ணிக்கையிலான அந்நிய நாட்டினர் தங்கி வியாபாரம் செய்வதை கருத்தில் கொண்டு இவ்விவகாரத்தை நகராண்மைக் கழகம் முழு கண்ணோட்டத்தில் பார்க்கிறது என அவர் சொன்னார்.