ஷா ஆலம், செப். 25- சீனாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தின் ஐந்தாவது நாளான இன்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான பேராளர் குழுவினர் பெய்ஜிங்கில் உள்ள பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு வருகை புரியவுள்ளனர்.
இன்றைய பயணத்தின் முதல் நிகழ்வாக சீனா கம்பூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ராக்சன் கம்பெனி லிமிடெட் (சி.சி.சி.சி.) நிறுவன தலைவர்களுடன் சந்திப்பு நடைபெறவுள்ளது.
உலகின் முன்னோடி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான சி.சி.சி.சி. 2021 ஃபோர்ச்சுன் குளோபர் 500 பட்டியலில் 61வது இடத்தைப் பிடித்துள்ளது.
மலேசியாவில் கிழக்குக் கரை இரயில் திட்ட (இ.சி.ஆர்.எல்.) திட்ட முதன்மை குத்தகையாளருமான இந்நிறுவனம் துறைமுகம், நெடுஞ்சாலை, பாலம், கிரேன், கொள்கலன் மற்றும் கடல் எண்ணெய் துரப்பன மேடை ஆகியவற்றை நிர்மாணிக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கி வருகிறது.
மாநிலத்தின் பசுமை போக்குவரத்து மற்றும் நவீன் போக்குவரத்து கோட்பாட்டின் ஒரு பகுதியாக கித்தா சிலாங்கூர் இரயில் தட திட்டத்தின் மேம்பாட்டில் ஒத்துழைப்பது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த திட்டம் சீராக நடைபெறுவதையும் மக்களுக்கு கூடினபட்ச நன்மைகளைக் கொண்டு வருவதையும் உறுதி செய்வதற்காக விவேக பங்களிப்பு மற்றும் முதலீட்டு பங்காளியை தேடும் கட்டத்தில் இந்த திட்டம் உள்ளது.
பின்னர் அமிருடின் தலைமையிலான பேராளர்கள் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மலேசிய மாணவர்களுடன் சந்திப்பு நடத்துவர். இளைஞர் தலைமைத்துவம், கல்வி வாய்ப்புகள், அனைத்துலக நிலையில் நாட்டின் இளம் அரசதந்திரிகள் முறையில் பங்களிப்பு ஆகியவை தொடர்பில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் தளமாக இந்த சந்திப்பு விளங்கும்.
இன்றைய பயணத்தின் இறுதி நிகழ்வாக ஈஸ்டர்ன் உணவகத்தில் பெய்ஜிங்கில் உள்ள புலம் பெயர்ந்த மலேசியர்களுடன் இரவு விருந்து நடைபெறும்.