கோலாலம்பூர், செப். 25 - இவ்வாண்டு ஆசியான் அமைப்புக்கான மலேசியாவின் தலைமையை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (யு.எஸ்.டி.ஆர்.) ஜேமிசன் கிரேர் பாராட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் (ஏ.இ.எம்.) இடையிலான ஆலோசனை கூட்டத்திற்கு தலைமையேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை நடந்த 10 நாடுகளின் பிராந்திய கூட்டங்களில் இவ்வாண்டு மலேசியாவின் தலைமைத்துவத்தையும் உபசரிப்பையும் பெரிதும் பாராட்டினார்.
வழங்கப்பட்ட உபசரணையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஆசியான் தலைவராக மலேசியா சிறந்த தலைமைத்துவத்தைக் காட்டியுள்ளது என்று கூட்டத்திற்கு இடையிலான சந்திப்பில் கிரீர் கூறினார்.
கடந்த 1977, 1997, 2005 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கு பிறகு மலேசியாவின் ஐந்தாவது ஆசியான் தலைமைப் பதவியை இது குறிக்கிறது.
முன்னதாக தனது தொடக்க உரையில், மலேசியாவின் தலைமை பதவிக் காலத்தில் ஏ.இ.எம். கலந்துரையாடல் பங்காளிகளுடன் நடத்தப்பட்ட கூட்டங்களில்
நடைமுறைவாதம் மற்றும் நிலையான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதற்காக ஏ.இ.எம். தலைவர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருல் தெங்கு அப்துல் அஜிஸுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஆசியான் மலேசியாவின் தலைமையில் குறிப்பாக அமைச்சர் ஸப்ருல் தலைமையில் மிகச் சிறப்பாகச் சேவை செயல்பட்டுள்ளது. அமெரிக்காவின் சார்பாக கோலாலம்பூரில் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று கிரேர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவுக்கு வருவார் என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி உறுதிப்படுத்தினார்.
ஆசியான் அமைப்பில் மலேசியாவின் தலைமை - அமெரிக்கா பாராட்டு
25 செப்டெம்பர் 2025, 2:19 AM