கோலாலம்பூர், செப் 24 - அரச மலேசிய போலீஸ் படை இம்மாதம் 11ஆம் தேதி நான்கு மாநிலங்களில் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில் திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த 17 உறுப்பினர்களைக் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இக்கும்பல், கொலை மற்றும் தீயைப் பயன்படுத்தி சேதம் உண்டாக்குதல் உள்ளிட்ட வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டு செய்து வந்ததாக நம்பப்படுகிறது என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
பத்தொன்பது முதல் 44 வயதுடைய சந்தேக நபர்களை உள்ளடக்கிய கைது நடவடிக்கை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையால் பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு போலீஸ் தலைமையகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கிள்ளான், தாமான் செந்தோசாவில் இக்கும்பல் நிகழ்த்திய மரணத் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதாக அவர் கூறினார்.
கடந்த ஜூன் மாதம் பிரிக்பீல்ட்ஸ் மற்றும் செராஸில் உள்ள உணவகங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இக்கும்பலின் தொடர்பு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேக நபர்கள் அனைவரும் 80 முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதில் போதைப்பொருள் தொடர்பான 34 வழக்குகளும் அடங்கும் என்று முகமட் காலிட் குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரும் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் (சொஸ்மா) மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலின் உறுப்பினராகளாக இருந்ததற்காக
தண்டனைச் சட்டத்தின் 130வி பிரிவு மற்றும் 2001ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் சட்டம் (AMLATFPUAA 2001) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கும்பலில் 33 உறுப்பினர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள வேளையில் இதில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட உள்ளூர்வாசி உட்பட ஆறு முக்கிய நபர்கள் உள்பட எஞ்சிய உறுப்பினர்களை தாங்கள் தேடி வருவதாக அவர் கூறினார்.
இந்தக் கும்பலின் முக்கிய நோக்கம் லாபம், வட்டார கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்திற்கான போராட்டம் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் சிலர் போதைப்பொருள் நடவடிக்கைகளிலும் உரிமம் பெறாத கடன் தொழிலும் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
திட்டமிட்டக் குற்றச்செயல் கும்பல் முறியடிப்பு- 80 குற்றப்பதிவுகள் கொண்ட 17 பேர் கைது
24 செப்டெம்பர் 2025, 10:21 AM


