கோலாலம்பூர், செப். 24 - மலேசியா ஹமாஸ் அமைப்பின் செயல்பாட்டு மையமாக செயல்படுகிறது என்ற அமெரிக்க கருவூலத் துறையின் முன்னாள் பயங்கரவாத நிதி ஆய்வாளர் ஜோனாதன் ஷான்சரின் கூற்றினை அரச மலேசிய போலீஸ்படை மறுத்துள்ளது.
பாலஸ்தீன மக்களின் போராட்டம் இந்நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்துடன் மிகவும் நெருக்கமான ஒரு பிரச்சனை என்றாலும் மலேசியா இன்னும் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது என்று தேசிய போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறினார்.
எங்களுக்கு நெருக்கமான வெளிநாட்டு குடிமக்கள் குறிப்பாக பாலஸ்தீனம், சிரியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் எங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பயில்கின்றனர். ஒருவேளை மக்கள் மீதான எங்கள் பரிவு மற்ற தரப்பினரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம் என்று அவர் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
ஆர்வம் காட்டவில்லை என்று ஷான்சர் முன்னதாக தனது சமூக ஊடகம் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கிடையில், எதிர்காலத்தில் பாதுகாப்பையும் ஆக்ககரமான நடவடிக்கையையும் உறுதி செய்வதற்காக அரச மலேசிய போலீஸ்படை எப்போதும் வெளி தரப்பினருடன் ஒத்துழைத்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் என்று முகமட் காலிட் குறிப்பிட்டார்.
குடிநுழைவுத் துறை, அரச மலேசிய சுங்கத் துறை மற்றும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் விளைவாக நாட்டின் எல்லை உட்பட தேசிய பாதுகாப்பு உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கிறோம். தகவல்களைப் பகிர்ந்து கொள்வதோடு எல்லைக்கு அருகிலுள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கூட்டு நடவடிக்கை எடுக்கிறோம் என்று அவர் சொன்னார்.
மலேசியா ஹமாஸின் செயல்பாட்டு மையமா? காவல்துறை மறுப்பு
24 செப்டெம்பர் 2025, 9:41 AM


