புத்ராஜெயா, செப். 24 - ஐந்து வகையான ஆடம்பர வாகனங்கள் கிட்டத்தட்ட 3.57 கோடி வெள்ளி சாலை வரி நிலுவைத் தொகையை வைத்துள்ளதை சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜே.பி.ஜே) தரவுகள் காட்டுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று தெரிவித்தார்.
ஜே.பி.ஜே. தரவுகளின் அடிப்படையில், போர்ஷே வாகனங்கள் அதிகபட்சமாக வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறிய அவர், அந்த ரகத்தைச் சேர்ந்த 4,308 வாகனங்கள் செலுத்த வேண்டிய சாலை வரி மொத்தம் 1.37 கோடி வெள்ளியாகும் எனக் கூறினார்.
மற்ற நான்கு ரகக் கார்களில் ஃபெராரி (675 கார்கள்) 47 லட்சம் வெள்ளியும் பென்ட்லி (660 கார்கள்) 70 லட்சம் வெள்ளியும் லம்போர்கினி (372 கார்கள்) 37 லட்சம் வெள்ளியும் ரோல்ஸ் ராய்ஸ் (345 கார்கள்) 64 லட்சம் வெள்ளியும் வரி பாக்கி வைத்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
பல சொகுசு வாகன உரிமையாளர்கள் தங்கள் மோட்டார் வாகன உரிமத்தை புதுப்பிக்கும் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிடுகிறார்கள் என்பதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.
அவர்களில் பிரமுகர்களும் அடங்குவர். சிலர் டான் ஸ்ரீ அந்தஸ்து கொண்டவர்களாகவும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். அவர்கள் தங்கள் பொறுப்புகளை(சாலை வரி செலுத்துதல்) நிறைவேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
வருடத்திற்கு ஆயிரக்கணக்கான வெள்ளி செலவு செய்து சாலை வரியை புதுப்பிப்பதை விட 300 வெள்ளி சம்மன் செலுத்துவது புத்திசாலித்தனமானது என்று கருதுவதால் தங்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் வரை வேண்டுமென்றே காத்திருக்கும் சொகுசு வாகன உரிமையாளர்கள் இருப்பதாக லோக் கூறினார்.
சொகுசு கார்களுக்கான சாலை வரி, வாகனத்தின் வகை மற்றும் விவரக்குறிப்பைப் பொறுத்து ஆண்டுக்கு வெ.15,000 முதல் வெ.30,000 வரை இருக்கும்.
சாலை வரி செலுத்தப்படாத ஃபோர்ஷே, ஃபெராரி, ரோல்ஸ் ரோய்ஸ் கார்கள் - அமைச்சர் அம்பலம்
24 செப்டெம்பர் 2025, 9:09 AM


