நோபல் பரிசு வேண்டுமா? காஸா போரை நிறுத்துங்கள் - டிரம்பிற்கு மேக்ரோன் அறிவுறுத்து

24 செப்டெம்பர் 2025, 9:05 AM
நோபல் பரிசு வேண்டுமா? காஸா போரை நிறுத்துங்கள் - டிரம்பிற்கு மேக்ரோன் அறிவுறுத்து

நியூயார்க், செப். 24 - அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை பெற விரும்பினால் அவர் காஸாவில் போரை நிறுத்த வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.

நியூயார்க்கிலிருந்து பிரான்சின் பி.எஃப்.எம். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மேக்ரோன், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இஸ்ரேல் மீது நெருக்குதல் கொடுக்கும் அதிகாரம் டிரம்பிற்கு மட்டுமே உள்ளது என்றார்.

இது குறித்து ஏதாவது செய்யக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் அமெரிக்க அதிபர்தான் என்று மக்ரோன் கூறினார்.

மேலும் அவர் எங்களை விட அதிகமாகச் செய்ய முடியும். காரணம், காஸாவில் போரை நடத்த வழி வகுக்கும் ஆயுதங்களை நாங்கள் வழங்குவதில்லை. காசாவில் போர் தொடுக்க அனுமதிக்கும் உபகரணங்களை நாங்கள் வழங்குவதில்லை. அமெரிக்காதான் அதனைச் செய்கிறது என அவர் குறிப்பிட்டார்.

நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவையில் டிரம்ப் போர்க்குணமிக்க, பரந்த அளவிலான உரையை ஆற்றினார். அதில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் மேற்கத்திய நட்பு நாடுகளின்

நடவடிக்கைகளை அவர் நிராகரித்தார். அது ஹமாஸ் போராளிகளுக்கு ஒரு வெகுமதியாக இருக்கும் என்றும் கூறினார்.

காஸாவில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். உடனடியாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டிரம்ப் தமது உரையில் குறிப்பிட்டார்.

டிரம்பின் உரையைப் பற்றி கருத்துரைத்த மேக்ரோன், நான் ஒரு அமெரிக்க அதிபரைப் பார்க்கிறேன். அவர் இன்று காலை மேடையில் மீண்டும் கூறினார்: எனக்கு அமைதி வேண்டும். நான் ஏழு மோதல்களைத் தீர்த்துவிட்டேன் என்றார். அவர் அமைதிக்கான நோபல் பரிசை விரும்புகிறார் என்றார்.

இந்த மோதலை நிறுத்தினால் மட்டுமே அமைதிக்கான நோபல் பரிசு சாத்தியமாகும் என்று மேக்ரோன் கூறினார்.

அமைதி ஒப்பந்தங்கள் அல்லது போர் நிறுத்தங்களை ஏற்படுத்தியதற்காக டிரம்பை வருடாந்திர நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த நாடுகளில் கம்போடியா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் ஆகியவையும் அடங்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.