ஷா ஆலம், செப். 24 - சுக்மா சிலாங்கூர் 2026 மலேசியா விளையாட்டுப் போட்டிகளுக்கு சிறந்த விளையாட்டு வீரர்கள் கொண்ட அணியை தயார்படுத்துவதில் சிலாங்கூர் மாநில ரக்பி சங்கம் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
பெண்கள் அணி சாம்பியன்ஷிப் தகுதியை தக்கவைத்துக் கொள்வதையும் ஆண்கள் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதையும் அந்த சங்கம்
இலக்காகக் கொண்டுள்ளது.
மாநிலத்தைப் பிரதிநிதிக்கக்கூடிய அளவுக்கு உண்மையிலேயே தகுதி உள்ள விளையாட்டாளர்களை மதிப்பீடு செய்து தேர்ந்தெடுக்க ஆறு மாத அவகாசம் இருப்பதாக சங்கத்தின் தலைவர் லிம் யி வெய் கூறினார்.
நாங்கள் இன்னும் விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது மையப்படுத்தப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சுக்மா போட்டியில் சிலாங்கூரைப் பிரதிநிதிக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை அடையாளம் காண இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன.
சுக்மா போட்டியில் பெண்கள் ரக்பி அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். அதே நேரத்தில் சரவாக்கில் நடைபெற்ற முந்தைய போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த ஆண்கள் அணி இம்முறை அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
சிலாங்கூர் மகளிர் ரக்பி அணி சுக்மா சரவாக் 2024
இறுதிப் போட்டியில் 12-7 என்ற கணக்கில் போட்டியாளர்களை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. அதே சமயம், ஆண்கள் அணி ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்தது.
சிலாங்கூர் சுக்மா 2026 அடுத்தாண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 வரையிலும் அதனைத் தொடர்ந்து பாரா சுக்மா செப்டம்பர் 5 முதல் 14 வரையிலும் நடைபெறவுள்ளது.
இப்போட்டியின் தொடக்க விழா சிப்பாங் அனைத்துலகப் பந்தயத் தடத்திலும் நிறைவு விழா பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற மைதானத்திலும் நடைபெறும். 2026 சுக்மாவில் 37 பிரிவுகளை உள்ளடக்கிய 474 போட்டிகள் நடைபெறுகின்றன


