டிலி, (தீமோர் லெஸ்தே), செப். 24 - ஆசியான் அமைப்பில் உறுப்பியம் பெறுவதற்கு தீமோர் லெஸ்தே மேற்கொண்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தீமோர் லெஸ்தே நாடாளுமன்றத்தில் வரலாற்றுப்பூர்வ உரை நிகழ்த்திய அன்வார், சுதந்திரத்திற்காக தொடக்கக் காலம் தொட்டு அந்நாடு நடத்தி வந்த போராட்டங்களில் மலேசியாவின் நிலைப்பாடு சீராக இருந்ததை தாம் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.
டாக்டர் மகாதீர் பிரதமராக இருந்த சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலக்கட்டத்தை பல இங்கு நினைவுக்கூர்ந்தீர்கள். அவர் தனது உரைகளில் தொடர்ச்சியான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சி சரியான தடத்தில் செல்வதை உறுதி செய்வது இப்போது எனது பணி என நினைக்கிறேன் என்று அன்வார் சொன்னார்.
தீமோர் லெஸ்தே நாடாளுன்றத்தை ஜனநாயகத்தின் நாடித் துடிப்பு என வர்ணித்த பிரதமர், அந்நாடு ஆசியானில் நிரந்தர உறுப்பியம் பெறுவதில் மலேசியாவின் பிளவுபடாத ஆதரவை மறுவுறுதிப்படுத்தினார்.
தீமோர் லெஸ்தேவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அன்வார், அந்நாடு ஆசியானில் உறுப்பியம் பெறுவதை தாமதிப்பதற்கு எந்த காரணமும் கிடையாது என்றார்.
ஆசியானில் தீமோர் லெஸ்தே முழு உறுப்பியம் பெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக எனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஆசியானில் உள்ள அனைத்து தலைவர்களையும் இணங்க செய்வதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன் என அவர் சொன்னார்.


