ஷா ஆலம், செப். 24 - செரி நிறுவனம் சிலாங்கூரில் செய்யவிருக்கும் முதலீடு உயர்திறன் துறைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் உள்நாட்டு பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் துறைகளில் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும்.
அந்நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளில் செய்யவிருக்கும் 200 கோடி வெள்ளிக்கும் அதிக மதிப்பிலான முதலீடுகளின் வாயிலாக இந்த நேரடிப் பலன்கள் கிட்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வாகனத் தொழில்துறை சார்ந்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினரின் பொருளாதார நடவடிக்கைள் உத்வேகம் பெறுவதற்கும் உலகளாவிய நிலையில் சிலாங்கூர் போட்டியிடும் ஆற்றலை பெருக்கிக் கொள்வதற்கும் இந்த முதலீடு வாய்ப்பினை ஏற்படுத்தும் என அவர் சொன்னார்.
மாநில மக்களின் நலனுக்காக மேலும் கூடுதல் வாய்ப்புகளை பெறும் நோக்கில் செர்ரி மற்றும் இதர முதலீட்டாளர்களுடன் சிலாங்கூர் தொடர்ந்து வியூக ஒத்துழைப்பை அதிகரித்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலு சிலாங்கூர், பெரிங்கின் ஹை-டெக் ஆட்டோ வேலியில் 323.75 ஹெக்டர் பரப்பளவில் செரி ஸ்மார்ட் ஆட்டோ தொழிலியல் பூங்காவை அமைப்பது உள்ளிட்ட முதலீடுகளை செர்ரி நிறுவனம் சிலாங்கூரில் செய்யவிருக்கிறது.
சீனாவிலுள்ள செரி நிறுவனத்தின் கார் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு பேராளர் குழுவுடன் வருகை மேற்கொண்ட அமிருடின், வாகனத் தயாரிப்பில் ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அந்நிறுவனத்தின் மேம்பாடு குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
இங்கு காணப்படும் தானியங்கி மேம்பாடுகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். வெல்டிங் மற்றும் வாகன பாகங்களை பொருத்துவது உள்ளிட்ட ஏறக்குறைய அனைத்துப் பணிகளையும் ரோபோ மேற்கொள்கிறது.
நுணுக்கமான அம்சங்கள் மற்றும் தர கட்டுப்பாடு மட்டும் மனிதர்களால் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.



