மலிவு விலையில் ரோன்95 - மலேசியர்கள் மாதம் வெ.200 சேமிக்க முடியும்

24 செப்டெம்பர் 2025, 5:09 AM
மலிவு விலையில் ரோன்95 - மலேசியர்கள் மாதம் வெ.200 சேமிக்க முடியும்

கோலாலம்பூர், செப். 24 - பூடி மடாணி ரோன்95 (BUDI95) மானியத் திட்ட அமலாக்கம்  மூலம் தகுதியுள்ள மலேசியர்கள் மாதம் ஒன்றுக்கு 200  வெள்ளி வரை சேமிக்க முடியும் என்று நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விருப்பத்திற்கேற்ப  மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் கடப்ப்பாட்டை ரோன்95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு வெ.1.99 ஆகக் குறைக்கும் நடவடிக்கை  பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஒன்று முதல் இரண்டு மாதங்களில்  ரோன்95 இன் உண்மையான சந்தை விலை வெ.2.60 முதல் வெ.2.75 வரை இருந்தது. எனவே  பெட்ரோல் நிலையங்களில்  வாங்கும்போது அரசாங்கம் ஏற்கனவே கணிசமான மானியத்தை வழங்கி விட்டது.

பெட்ரோல் நிலையங்களில் விலை வெ.2.60 ஆக இருந்தால் மக்கள் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 183.00 வெள்ளியை  சேமிக்கிறார்கள். அதே சமயம் 2.75 வெள்ளியாக இருந்தால் சேமிப்பு மாதத்திற்கு 228.00  வெள்ளியாக இருக்கும்  என்று அவர் நேற்று பூடிI95 தொடர்பான செய்தியாளர்  சந்திப்பில்  கூறினார்.

இம்மாதம் 30 முதல்  வருமான அளவு வேறுபாடின்றி  மலேசியர்களுக்கு
ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.05 வெள்ளியிலிருந்து  1.99 வெள்ளியாக குறைக்கப்படும் என்று திங்களன்று பிரதமர் அன்வார் அறிவித்தார்.

இந்த பூடிI95  திட்டம் மூலம் உலகளாவிய எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து
அரசாங்கம் 250  கோடி வெள்ளி முதல் 400 கோடி வெள்ளி   வரை சேமிக்க முடியும் என்று அமீர் ஹம்சா கூறினார்.

உலகளாவிய எண்ணெய் விலையைப் பொறுத்து அரசாங்கத்திற்கு எவ்வளவு சேமிப்பு கிடைக்கும் என்பதை எங்களால் கணிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் உள்ள அனைத்து மலேசிய குடிமக்களும் ரோன்95 மானியத்திற்கு தகுதியுடையவர்கள். இதன்வழி  1.6  கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைவர்.

அடையாள சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும்  நாளை முதல்  
www.budimadani.gov.my வழியாக,  பூடிI95 வாடிக்கையாளர் சேவை மையத்தில்  அல்லது Setel மற்றும் CaltexGO செயலி மூலமாக தகுதியை இணையத்தில் சரிபார்க்கலாம் .

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.