கோலாலம்பூர், செப் 24 — மலேசிய அரசாங்கம் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்திய சாரா RM100 உதவி திட்டம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை குறைக்க ஒரு முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், தகுதி பெற்ற ஒவ்வொரு மலேசிய குடிமக்களின் மைகாட்டில் RM100 கிரெடிட் செய்யப்பட்டது. உதவித் தொகையைப் பயன்படுத்தி மக்கள் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் மளிகை கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும்.
மேலும் திட்டம் தொடங்கிய முதல் சில நாட்களிலேயே அதிகமான மக்கள் கடைகளுக்கு திரளாக வருகை புரிந்தனர். கூட்ட நெரிசல் மற்றும் டிஜிட்டல் கோளாறால் சில இடங்களில் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தினாலும், பெரும்பாலான பயனாளர்கள் இதை ஒரு நல்ல முன்னெடுப்பு எனக் கருதி, தொடர வேண்டிய திட்டமாகக் கூறியுள்ளனர்.
சிலர் இதை பணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினாலும், பலர் மைகாட் வழியாக வழங்கப்படும் முறையையே விரும்புகிறார்கள். ஏனெனில், பணத்தை வீண் செலவு செய்யாமல் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் பயன்படுத்த முடியும் என சிலர் தங்கள் கருத்துகளை மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்துக்கொண்டனர்.
கேகே மார்ட் கேஷியர் லினா லுண்டா, இந்த தொகை உணவு மற்றும் பானங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறினார். இந்த தொகை தனது உணவுக்கான செலவை குறைக்க உதவியது என்றார். ஆனால், இரண்டு நாட்கள் ஏற்பட்ட டிஜிட்டல் கோளாறால் பலர் சிரமப்பட்டனர். உதவித் தொகை பணமாகக் கொடுத்தால், மின்சார கட்டனம் போன்ற பிற செலவுகளுக்கும் பயன்படுத்த முடியும், என்றார்.
“ஒரு வாரம் காத்திருந்து பொருட்களை வாங்கினேன் என ராஜசுப்ரி சுப்பையா தெரிவித்தார். இதற்கு காரணம் டிஜிட்டல் கோளாறு ஏற்படும் என பயந்தேன். சில இடங்களில் விலை வேறுபாடு அதிகம், உதாரணத்திற்கு 99 ஸ்பீட்மார்ட்டில் சாடின் மலிவானது. விலை குறைவான பொருட்களை வாங்கும் போது பபட்ஜெட்டை நிர்வகிக்க உதவுகிறது, என்றார்.
மேலும் மலர் கடை உரிமையாளரான வாணி அருமுகம், உதவித் தொகை அவரது வாழ்க்கைச் செலவை குறைத்ததாகக் கூறினார். இது ஒரு நல்ல முயற்சி. ஆனால் RM100க்கு வாங்கும் பொருட்களின் அளவு குறைவாக இருக்கிறது. தொகையை அதிகரிக்க வேண்டும். அடுத்த ஆண்டும் இதைத் தொடர வேண்டும், என்று தனது கருத்தை அவர் பகிர்ந்துக் கொண்டார்.
மைசாரா தொகையை இன்னும் பயன்படுத்தவில்லை என்று மாணவரான முஹம்மது அஃபிக் இர்பான் கூறினார். “கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் காத்திருக்கிறேன். இத்திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பௌஅனுள்ள ஒன்றாகும், குறிப்பாக ரொட்டி, பால் போன்ற உணவுப்பொருட்களை வாங்க உதவும் என்றார்.
கேகே மார்ட் பணியாளர்களான நுருல் ஐன் ஆல்யா நடாஷா அஹ்மட், மைகாட் வழியாக வாங்கும் முறை எளிமையாக இருப்பதாகக் கூறி பாராட்டினார். இங்கு “மக்கள் பெரும்பாலும் அரிசி, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குகிறார்கள். இது அவர்களின் வாழ்வுச் செலவை குறைக்க உதவுகிறது என அவர் தெரிவித்தனர்.
அதே கடையில் பணிபுரியும் புனா ஸ்ரீ ராமநாதன், தொடக்கத்தில் டிஜிட்டல் கோளாறு இருந்தாலும் பின்னர் சூழ்நிலை கட்டுக்குள் வந்துவிட்டதாகக் கூறினார். RM100 பயன்படுத்தி மக்கள் பெரும்பாலும் சலவை தூள், பால் மாவு, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கினர்.
இது அவர்களின் சுமையை குறைப்பதை தான் காண்பதாக அவர் கூறினார். நானும் பணியாளராகவும், வாடிக்கையாளராகவும் இதன் பயனை உணர்ந்தேன் என்று விவரித்தார்.
இதற்கிடையில் லோ சி வேய், இன்னும் தனது மைசாரா தொகையை பயன்படுத்தவில்லை என்றார், தற்போது மக்கள் கூட்டம் கடைகளில் அதிகமாக இருப்பதால் காத்திருந்து அத்தொகையை பயன்படுத்தவுள்ளதாக அவர் சொன்னார். மேலும், தேவையான நேரத்தில் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.
மைசாரா RM100 உதவி திட்டம், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை குறைக்கும் ஒரு சிறந்த திட்டமாக மாறியுள்ளது. சிலர் பணமாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாலும், பெரும்பாலான மக்கள் மைகாட் வழி வழங்கும் முறையை விரும்புகின்றனர், ஏனெனில் அது அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் மட்டுமே செலவழிக்கத் தூண்டுகிறது.
ஆனால், தொகையை அதிகரித்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பலர் வலியுறுத்தினர். அரசாங்கம் எதிர்காலத்தில் மைசாரா உதவியை ஆண்டுதோறும், அல்லது கூடுதலாக மாதாந்திர உதவியாக வழங்கினால், மக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்பது உறுதி.


