இஸ்தான்புல், செப். 24 - காசா நகரிலுள்ள தங்களின் 12 வளாகங்கள் கடந்த வாரம் இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனம் நேற்று கூறியது.
காசா நகரிலுள்ள 12 வளாகங்கள் மீது கடந்த செப்டம்பர் 11 முதல் 16 வரை நேரடி அல்லது மறைமுக தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியது.
இதில் ஒன்பது பள்ளிகள் மற்றும் 11,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இரண்டு சுகாதார மையங்களும் அடங்கும் என்று அந்த நிறுவனம் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தது.
காசாவில் உள்ள ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிறுவன கள அலுவலகமும் மறைமுக தாக்குதல்களால் சேதமடைந்தது. அதே நேரத்தில் வடக்கு காசா பகுதியில் செயல்பட்டு வந்த ஒரே சுகாதார மையம் சேதம் காரணமாக கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி செயல்பாடுகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பொது உள்கட்டமைப்பு மீதான பெரும் தாக்குதல், மனிதாபிமான நடவடிக்கைகளில் கடுமையான இடையூறு மற்றும் உதவி விநியோகக் கட்டுப்பாடுகள் காசா நகரில் பொதுமக்களின் உயிர்ப்போராட்டத்தை கடுமையாகப் பாதிக்கிறது என்று அந்நிறுவனம் விளக்கியது.
கடந்த 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் இனப்படுகொலை தாக்குதலில்
இதுவரை 65,300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.


