டிலி, செப். 24 - அரசியல் நிலைத்தன்மை மற்றும் விவேகமான நிதி மேலாண்மை பேணுவதில் மலேசியா கொண்டுள்ள திறன், சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்கவும் உதவியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசிய புலம்பெயர்ந்தோர் மற்றும் மலேசிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டம் மற்றும் மலேசிய பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டம் ஆகியவற்றின் முன்னாள் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய அன்வார், கல்வி நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி சீர்திருத்தங்களோடு டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறைகளின் உத்வேகத்திற்கு அமைதியும் நிலைத்தன்மையும் அடித்தளமாக இருப்பதாகக் கூறினார்.
பிரிவினையை உருவாக்காமல் படிப்படியான சீர்திருத்தங்களைச் செயல்படுத்த மலேசியாவின்
அரசியல் நிலைத்தன்மை வழி வகுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அது விவேகமாக கையாளப்பட வேண்டும். கடினமுறையில் அல்ல. அவசரப்படக்கூடாது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மலேசியாவில் நாம் ஏன் சாதித்ததை அடைந்தோம்? முதலாவதாக, அமைதி இருக்கிறது. அரசியல் நிலைத்தன்மை இருக்கிறது என்று அவர் கூறினார்.
இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இங்கு வந்துள்ள அன்வார், பொருளாதார முன்னேற்றதை உறுதி செய்யும் அதே வேளையில், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கும் உள்நாட்டு முதலீடுகளை வலுப்படுத்துவதற்கும் தலைமைத்துவம், அரசு துறை மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்று கூறினார்.
மலேசியாவின் முன்னேற்றத்திற்கு நல்லாட்சியே மையமாக இருப்பதைக் அடிக்கோடிட்டுக் காட்டினாலும், ஊழல், துஷ்பிரயோகம் மற்றும் கசிவுகள் குறித்து அன்வார் எச்சரித்தார்.
கடுமையான கொள்முதல் செயல்முறைகள், வெள்ளத் தடுப்புத் திட்ட செலவினக் குறைப்பு மற்றும் இலக்கு மானியங்கள் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு வெ.1.99 ஆகக் குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அன்வார், இது உலகிலேயே மிகக் குறைந்த விலைகளில் ஒன்றாகும் என்றார்
மலேசியாவின் வளர்ச்சிக்கு நிலைத்தன்மையும் விவேக நிதி மேலாண்மையும் காரணம் - பிரதமர்
24 செப்டெம்பர் 2025, 1:51 AM


