ஷா ஆலம், செப். 23 - தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனை விமர்சிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கை, பழைய அரசியலில் சிக்கித் தவிக்கும் சில தரப்பினர் இன்னும் உள்ளதைக் காட்டுகிறது.
அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான எந்தவொரு பரிந்துரையும் சொல்லாமல் வெறும் விமர்சனங்களை மட்டும் முன் வைக்கின்றனர் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
உண்மையில், டத்தோஸ்ரீ ரமணன் அடித்தட்டு மக்களின் அபிலாஷைகளைத்தான் முன்வைக்கிறார். அவர் களத்திற்குச் சென்று சமூகத்தின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களின் குரல்களை நேரடியாக தலைமைத்துவத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறார் என்று குணராஜ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
மக்கள் ஊடகங்களில் வரும் வெற்று விவாதங்களை அல்லாமல் ஆக்ககரமான செயல்கள் தரும் முடிவுகளைத்தான் விரும்புகிறார்கள். ரமணன் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டு, இந்திய சமூகத்தின் விவகாரங்களைக் கவனிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டதிலிருந்து பல்வேறு உறுதியான முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் ஸ்புமி (SPUMI) மற்றும் ஸ்புமி கோஸ் பிக் (SPUMI Goes Big) ஆகியவை தெக்குன் நேஷனல் மூலம் விரிவுபடுத்தப்பட்டன. அதோடு மட்டுமின்றி பெண் (PENN) மற்றும் பிரிஃப்-ஐ (BRIEF-i) திட்டங்கள் வரலாற்றில் முதல் முறையாக அமானா இக்தியார் மலேசியா மற்றும் பேங்க் ராக்யாட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன
இந்திய வணிக உந்ததுதல் திட்டம் (I-BAP) எஸ்.எம்.இ. கார்ப்பரேஷன் வழி 60 லட்சம் வெள்ளி மேம்பாட்டு மானியத்துடன் தொடங்கப்பட்டது. அடுத்ததாக மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் பக்தி மடாணி மானியத் திட்டத்தைக் கூறலாம். 100 ஆண்டுகளில் இந்திய சமூக கூட்டுறவு கழகத்திற்கு இதுபோன்ற மானியம் வழங்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இந்த முயற்சிகளின் விளைவாக ரமணன் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதிலிருந்து 30,000 க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோர் வெற்றிகரமாக பலன் பெற்றுள்ளனர். மடாணி அரசாங்கம் வெறும் வாக்குறுதி அளிப்பது மட்டுமல்லாமல், கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் செயல்படுகிறது என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.
மாண்புமிகு பிரதமர் தெளிவான திட்டமிடலைக் கொண்டுள்ளார். அவற்றில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன் பலன்கள் மக்களால் உணரப்பட்டுள்ளன என்றும் நான் நம்புகிறேன். உள்ளடக்கிய மற்றும் வளமான மலேசியாவை உருவாக்குவதற்கான மடாணி அரசாங்கத்தின் அபிலாஷைகளுக்கு ஏற்ப பல அமைச்சுகள் மக்கள் பயனடையக்கூடிய பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன.
தனது சாதனைப் பதிவுகளோடு மக்களின் வளர்ச்சி திட்ட பணியை தொடர்ந்து செயல்படுத்த டத்தோஸ்ரீ ரமணனுக்கு தொடர்ந்து இடமும் நம்பிக்கையும் வழங்கப்பட வேண்டும். உண்மையில், முழு அமைச்சராக அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இதன் வழி மக்கள் சார்ந்த திட்டங்கள் மேலும் செயல்படுத்தப்படும் என குணராஜ் தமது அறிக்கையில் கூறினார்.
ரமணன் மீதான விமர்சனம் - குறை காணும் அரசியலிலிருந்து மீளாதத் தரப்பினர் - குணராஜ் சாடல்
23 செப்டெம்பர் 2025, 10:35 AM