ad

பாலஸ்தீனம் இறையாண்மை பெற்றால் இஸ்ரேலை அங்கீகரிக்கத் தயார்-இந்தோனேசியா

23 செப்டெம்பர் 2025, 10:28 AM
பாலஸ்தீனம் இறையாண்மை பெற்றால் இஸ்ரேலை அங்கீகரிக்கத் தயார்-இந்தோனேசியா

ஜகார்த்தா, செப். 23 - பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததற்காகப் பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளை இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ பாராட்டினார்.

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது வரலாற்று ரீதியாக ஒரு சரியான படியாகும். இன்னும் அவ்வாறு செய்யாதவர்களுக்கு வரலாறு நிற்காது என்று நாங்கள் கூறிக்கொள்கிறோம் என்று அவர் நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுப் பேரவையில்
ஆற்றிய உரையில் அவர் கூறியதாக அதிபர் செயலகம் தெரிவித்தது.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது அனைத்துலகச் சமூகத்திற்கு முன்னுரிமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அதே நேரத்தில் ஐ.நா.வின் கட்டளையின் கீழ் அமைதி காக்கும் படைகளை அனுப்புவது உட்பட உரிய பங்களிப்பை வழங்குவதில்  இந்தோனேசியாவின் விருப்பத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நாம் வெறுப்புணர்வு, அச்சம்
மற்றும் தப்பெண்ணத்தை களைய வேண்டும். மனிதகுலம் விரும்பும் அமைதியை நாம் அடைய வேண்டும். இந்தப் பயணத்தில் நாங்கள் உடன் வரத் தயாராக இருக்கிறோம். மேலும், பாதுகாப்புப் படைகளை அனுப்பவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிரபோவோ கூறினார்.

இரு நாடுகள் தீர்வுக்கான அனைத்துலக ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும் அதை செயல்படுத்துவதற்கான ஆதரவைத் திரட்டவும் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து தலைமை தாங்கிய உயர்மட்ட ஐ.நா. மாநாடு நடைபெற்றது.

பாலஸ்தீனப் பிரச்சனைக்கு அமைதியான தீர்வை நோக்கிய பாதையை வரையறுக்கும் ஒரு விளைவு ஆவணத்தை பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து பிரபோவோ கவலை தெரிவித்ததோடு பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்படும்  காட்டுமிராண்டித்னத்தையும் கண்டித்தார்.

ஆயிரக்கணக்கான அப்பாவிகள்  பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்கள் , பலியாகியுள்ளனர்.
பஞ்சம் நெருங்கி வருகிறது. நம் கண் முன்னே  மனிதாபிமானப் பேரழிவு வெளிப்படுகிறது. அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம்  என்று அவர் கூறினார்.

இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவின் தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான தனது நாட்டின் ஆதரவை பிரபோவோ மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார். அதுவே நீடித்த அமைதிக்கான ஒரே பாதை என்றும் விவரித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.