புத்ராஜெயா, செப் 23 — (BUDI95) திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்ப, தேவைப்பட்டால் மைகார்டு சிப் மாற்றுவதற்காக அதன் கவுண்டர் செயல்பாட்டு நேரத்தை நீட்டிக்க தேசிய பதிவுத் துறை தயாராக உள்ளது.
மாற்று செயல்முறை சீராக நடப்பதை உறுதி செய்வதற்கும், எதிர்வரும் செப்டம்பர் 30 அன்று BUDI95 திட்டம் நடைமுறைக்கு வரும்போது சிக்கல்களைக் குறைப்பதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.
“மை கார்டு மாற்றத்திற்கான வரிசை எண்களில் எந்த வரம்பும் இல்லை. BUDI95 அறிவிப்பின் காரணமாக அதிகமான மக்கள் வந்தால், செயல்பாட்டு நேரத்தை நீட்டிக்க நான் JPN ஊழியர்களிடம் தெரிவித்துள்ளேன்,`` என்றார்
“உண்மையில், செயல்பாட்டு நேரத்தை நீட்டிப்பது எப்போதும் தேசிய பதிவுத் துறையின் நடைமுறையின் ஒரு பகுதியாகும்,” என்று அவர் இன்று இலவச மை கார்டு சிப் மாற்றும் முதல் நாளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுவரை, பழுதடைந்த சிப்கள் காரணமாக மைகார்டு மாற்று விண்ணப்பங்கள் மாதத்திற்கு சராசரியாக 40,000 பெறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த எண்ணிக்கை 30,000ஆக இருந்தது என்று சைஃபுடின் மேலும் கூறினார்.
இன்று முதல் அக்டோபர் 7 வரை அறிவிக்கப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி, தங்கள் மைகார்டு சிப் செயல்படுவதை உறுதி செய்யுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
“இந்தக் காலத்திற்குள் தங்கள் பழுதடைந்த மைகார்டுகளை மாற்றுபவர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பொதுவாக, RM10 கட்டணம் விதிக்கப்படும்.
“BUDI95 செயல்படுத்தப்படுவதற்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ளதால், விரைந்து செயல்படுமாறு,”அவர் பொதுமக்களை கேட்டுகொண்டார்.