கோலாலம்பூர், செப். 23 - தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா தனது தளத்தில் குற்றச் செயல்களைக் கையாள்வதில் ஆக்ககரமாகச் செயல்படாதது குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி ஃபாட்சில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், அந்நிறுவனம் ஒத்துழைப்புகளை அதிகரிக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக அரசாங்கம் மேலும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தில் (எம்.சி.எம்.சி.) மெட்டா பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடைபெற்றதாக பாஹ்மி தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அரச மலேசிய போலீஸ் படையின் குற்றப்புலனாய்வுத் துறை, இணைய பாதுகாப்பு நிறுவனம், சட்டத்துறை தலைவர் அலுவலகம், வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றதாக அவர் சொன்னார்.
இந்தக் கூட்டம் இணைய சூதாட்டம், மோசடி, தவறான தகவல்களைப் பரப்புதல், 3ஆர் உள்ளடக்கம் (இனம், மதம், ஆட்சியாளர்கள்) மற்றும் போதைப்பொருள் கலந்த வேப் திரவம் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனை உள்ளிட்ட மெட்டா தளம் குறிப்பாக முகநூல் சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நிலவரப்படி, முகநூல் தளத்திலிருந்து மட்டும் 168,774 உள்ளடக்கங்களை அகற்றக்கோரும் கோரிக்கைகள் மெட்டாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாஹ்மி கூறினார். இது மலேசியாவில் உள்ள அனைத்து சமூக ஊடக தளங்களிலும் உள்ள மொத்த உள்ளடக்கக் அகற்றல் கோரிக்கைகளில் 59 விழுக்காட்டைக் குறிக்கிறது.
அந்த எண்ணிக்கையில், 120,127 உள்ளடக்கங்கள் இணைய சூதாட்டத்துடன் தொடர்புடையவை. எனினும், 114,665 உள்ளடக்கங்கள் மட்டுமே நீக்கப்பட்டன.
இதற்கிடையில், மோசடி நடவடிக்கைகள் தொடர்பான 37,722 உள்ளடக்கங்கள் தடை செய்யப்பட்டன. மீதமுள்ள உள்ளடக்கங்கள் இன்னும் முகநூல் தளத்தில் சட்டப்பூர்வமாக உள்ளன. இது கவலையை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.