புத்ராஜெயா, செப் 23: இன்று முதல் அக்டோபர் 7 வரை சேதமடைந்த மைகார்ட் சிப்களை இலவசமாக மாற்றும் சேவையை தேசிய பதிவுத் துறை (NRD) வழங்குகிறது.
BUDI95 திட்டத்தின் கீழ் குடிமக்கள் RON95 பெட்ரோல் மானியத்தை அனுபவிப்பதற்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய பதிவுத் துறை கவுண்டர்கள் மற்றும் அலுவலகங்களிலும் இந்த சேவைக்கான செலவை மடாணி அரசாங்கமே முழுமையாக ஏற்கும். இதன் செலவு RM714,660 ஐ எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
“கடந்த இரண்டு மாதங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் சராசரியின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் சுமார் 43,000 யூனிட் சேதமடைந்த மைகார்ட் சிப்களை மாற்றுவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. எனவே, தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக எந்த குடிமகனும் BUDI95 திட்டதிலிருந்து விடுபடாத வகையில், சிப்களை மாற்றும் செலவுகளை அரசாங்கம் முழுமையாக ஏற்கிறது, ”என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
செப்டம்பர் 30 முதல் BUDI95 மானியத்தை இலக்காகக் கொண்டு, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் 16 மில்லியன் குடிமக்களை உள்ளடக்கிய RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM1.99 ஆகக் குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.