இஸ்தான்புல், செப். 23 - பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நேற்றிரவு அறிவித்ததாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
"பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிப்பதாக நான் இன்று (நேற்றிரவு) அறிவிக்கிறேன்" என்று இவ்வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவை தொடங்குவதற்கு முன்னதாக நியூயார்க்கில் நடந்த பாலஸ்தீனம் குறித்த அனைத்துலக மாநாட்டில் மக்ரோன் கூறினார்.
காசாவில் போர், குண்டுவீச்சு, படுகொலைகள் மற்றும் மக்களின் கட்டாய வெளியேற்றத்தை நிறுத்துவதற்கு நேரம் வந்துவிட்டது.
காசாவில் தொடர்ந்து போர் நிகழ்வதை எதுவும் வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.
பாதுகாப்புக்கான நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் பாதுகாப்பை அடைவதற்கான வாய்ப்பு நழுவிப் போவதற்கு இன்னும் சிறிது காலம் மட்டுமே உள்ளது என்று கூறி சூழ்நிலையின் அவசரத்தை மக்ரோன் வலியுறுத்தினார்.
பாலஸ்தீன நாட்டிற்கு அண்மையில் ஆதரவளித்த அன்டோரா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, போர்ச்சுகல், இங்கிலாந்து மற்றும் சான் மரினோ உள்ளிட்ட நாடுகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அந்த அங்கீகாரம் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்புத் திட்டத்தை நோக்கி அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுத்துள்ளது.
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட்டு போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டப் பின்னர் பாலஸ்தீனத்தில் தூதரகத்தைத் திறப்பது குறித்து பிரான்ஸ் முடிவெடுக்கும் எனக் கூறிய அவர், இப்பிராந்தியத்தில் அனைத்துலக அமைதியை நிலைநாட்டும் பணிகளுக்கு பங்களிக்க பாரிஸ் தயாராக இருப்பதாக கூறினார்