கோலாலம்பூர், செப். 23 - தலைநகரில் நேற்று மாலை பெய்த பலத்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததைத் தொடர்ந்து கே.டி.எம். பயணிகள் இரயில் சேவையில் இன்று தாமதம் ஏற்பட்டது.
சாலாக் செலாத்தான் - போர்ட் கிளாங் வழித்தடம் (மிட் வேலி- அப்துல்லா ஹுக்கும் நிலையங்களுக்கு இடையில்) மற்றும் சிம்பாங் பத்து (செந்துல்- சிகாம்பூட் இடையே) ஆகிய இடங்களில் உள்ள தொலைத் தொடர்பு உபகரணங்கள் சீரமைப்பு மற்றும் மரங்களை அகற்றும் பணி நேற்றிரவு வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாக கெரேத்தாப்பி தானா மெலாயு பெர்ஹாட் (கே.டி.எம்.பி.) தெரிவித்தது,
பிரதான மின்தடை சம்பவத்தால் நேற்று மாலை 4.24 மணிக்கு 25kV மின்சாரம் தடைபட்டது. இதனால் சம்பந்தப்பட்ட தடத்தில் இரயில் போக்குவரத்து தடைபட்டது.
இருப்பினும், கே.டி.எம்.பி. தொழில்நுட்பக் குழுவின் விரைவான நடவடிக்கைகள் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் 50 நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுத்துக் கொண்டதால் கே.டி.எம். பயணிகள் இரயில்
மற்றும் இ.டி.எஸ். ரயில்கள் வழக்கம் போல் மீண்டும் இயக்கப்பட்டன. இருப்பினும் சம்பவங்களின் சங்கிலித் தொடரின் தாக்கத்தால் சிறிது பின்னடைவு ஏற்பட்டது என்று அந்நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கே.டி.எம். பயணிகள் இரயில் சேவையைப் பொறுத்தவரை சுபாங் ஜெயா, சுங்கை பூலோ, கெப்போங், புத்ரா, ஸ்ரீ செத்தியா, பந்தாய் டாலாம், காஜாங், பேங்க் நெகாரா, சிபூத்தே மற்றும் சாலாக் செலாத்தான் நிலையங்களில் 32 முதல் 69 நிமிடங்கள் வரை தாமதங்கள் ஏற்படும்.
இ.டி.எஸ். சேவை கட்டுப்படுத்தப்பட்ட தாமதங்களுடன் செயல்பாடுகள் மீண்டு வருகிறது என கே.டி.எம்.பி. அறிவித்தது.
எதர்பாராத வகையில் நிகழ்ந்த இச்சம்பவங்களைத் தொடர்ந்து பயணிகளுக்கு ஏற்பட்ட அனைத்து சிரமங்கள் குறித்து கே.டி.எம்.பி. மிகவும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் சேவையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கு நாங்கள் எப்போதும் உறுதி பூண்டுள்ளோம் என்று அந்த அறிக்கை கூறியது.
மரம் விழுந்ததால் கே.டி.எம். இரயில் சேவையில் தாமதம்
23 செப்டெம்பர் 2025, 4:01 AM