கோலாலம்பூர், செப். 23 - போலி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொள்ளையிட்டதோடு போலீஸ்காரர்கள் போல் நடித்த சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்களை போலீசார் நேற்று அதிகாலை இங்குள்ள ஜாலான் கம்போங் பாசீரில் கைது செய்தனர்.
பந்தாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த மோட்டார் ரோந்து குழுவினர் அதிகாலை 3.30 மணியளவில்
பந்தாய் டாலாம், ஜாலான் கம்போங் பாசீரில் ரோந்து நடவடிக்கையை கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நான்கு பேரின் நடமாட்டத்தைக் கண்டதாகப் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
அங்கு விசாரணை நடத்திய போது மூன்று சந்தேக நபர்கள் துப்பாக்கியை காட்டி தனது அடையாள அட்டை, தொலைபேசி எண் மற்றும் பணப்பையை பறித்துக் கொண்டதாக அங்கிருந்த ஆடவர் ஒருவர் தெரிவித்ததாக அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், விரைவாகச் செயல்பட்ட காவல்துறையினர் அவர்களை வெற்றிகரமாக மடக்கி கைது செய்தனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து துப்பாக்கி வடிவிலான லைட்டர் (போலி துப்பாக்கி), 17 வயதுடைய பாதிக்கப்பட்ட இளைஞருக்குச் சொந்தமான கைப்பேசி, பணப்பை போன்ற பல தனிப்பட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையில் 26 முதல் 35 வயதுடைய சந்தேக நபர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.
போலீஸ்காரர்கள் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் முறியடிப்பு
23 செப்டெம்பர் 2025, 3:57 AM