ஷா ஆலம், செப். 23 - மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சீனாவுக்கான தனது பணி நிமித்தப் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று ஷங்காயில் இரு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கிறார்.
சிலாங்கூர் மாநிலத்தில் ஐ.சி எனப்படும் ஒருங்கிணைந்த மின்சுற்று வடிவமைப்பு பூங்காவில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பில் சைனா போர்ச்சுன் டெக் கேப்பிட்டல் கோ. லிமிட ட் நிறுவனத்துடன் அவர் சந்திப்பு நடத்தவிருக்கிறார்.
சிலாங்கூர் அரசு ஐ.சி. வடிவமைப்பு பூங்காவை பூச்சோங்கில் கடந்த 2024ஆம் ஆண்டு நிறுவியது. இரண்டாவது பூங்கா சைபர் ஜெயாவில் வரும் நவம்பர் மாதம் திறக்கப்படவுள்ளது.
நாட்டின் செமிகண்டக்டர் துறையை வலுப்படுத்துவதற்காக சிலாங்கூர் அரசு கடந்தாண்டு இங்கிலாந்தின் ஏஆர்எம்.லிமிடெட், சீனாவின் ஷென்ஸென் செமிகண்டக்டர் இண்டஸ்ட்ரி உள்ளிட்ட நான்கு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஐ.சி. வடிவமைப்பு மற்றும் செமிகண்டக்டர் துறையின் உந்து சக்தியாக விளங்கும் வகையில் சிலாங்கூரில் கேந்திர முக்கியத்துவ மையமாக பூச்சோங்கை உருவாக்குவதற்காக பைசன் மலேசியா மற்றும் கைசிப் நிறுவனங்களை உள்ளடக்கிய விவேக ஒத்துழைப்பு மீதும் கவனம் செலுத்தப்படுகிறது.
சிலாங்கூர் டிஜிட்டல் பொருளாதார தகவல் தொழில்நுட்ப கழகத்தால் (சைடெக்) அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் நிர்வகிக்கப்படவுள்ள இந்த மையம் 100 கோடி வெள்ளி வரை வருமானத்தை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மையத்தின் வழி மாதம் 7,000 வெள்ளி வரை வருமானம் ஈட்டக்கூடிய உயர் நிபுணத்துவ துறைகளில் அதிகளாவிலான வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதோடு இதன் மூலம் மாநிலத்தின் திறன் மேம்பாட்டிற்கும் ஆக்ககரமான விளைவுகளும் ஏற்படும்.
இன்றைய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக சிலாங்கூர் பேராளர் குழு செர்ரி ஆட்டோமோபில் கோ. லிமிட ட் நிறுவன அதிகாரிகளுடனும் இன்று சந்திப்பு நடத்தும்.