ஷா ஆலம், செப். 23 - காராக் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 19 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து இன்று அதிகாலை 2. 00 மணிக்கு தமது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் சொன்னார்.
அங்கு பெரோடுவா அத்திவா, பெரோடுவா மைவி மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்துள்ளதை அவர்கள் கண்டனர். 20 வயதுடைய நான்கு ஆடவர்கள் இச்சம்பவத்தில் உயிர்த் தப்பியதாகக் கூறப்படுகிறது. 19 வயது பெண் ஹோண்டா சிட்டி ரயிலில் சிக்கிக் கொண்டார்.
சம்பவ இடத்திலிருந்த மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் அப்பெண் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
உயிரிழந்த அந்த இளம்பெண்ணின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மீட்பு நடவடிக்கை அதிகாலை 3.48 மணிக்கு முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.