கோல திரங்கானு, செப். 23 - கிளந்தான், திரங்கானு, பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களைக் இணைக்கும் கிழக்கு கரை ரயில் இணைப்பு (இ.சி.ஆர்.எல்.) திட்டம் கடந்த ஆகஸ்டு மாத நிலவரப்படி 87 விழுக்காடு ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இத்திட்டப் பணிகள் திரங்கானு மாநிலத்தில் வேகமாக முடிக்கப்பட்டதாகக் கூறிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், மாநிலத்தின் சமதரையான புவியியல் அமைப்பு மற்றும் கட்டுமானத்தில் குறைவான சவால்கள் ஆகியவற்றோடு நிலப் பிரச்சினைகள் முன்பே தீர்க்கப்பட்டதும் இதற்கு காரணமாகும் என்றார்.
திரங்கானுவில் இரயில் தண்டவாளக் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. இன்னும் பூர்த்தி செய்ய வேண்டிய பிரிவுகளில் பெந்தோங்கிலிருந்து கோம்பாக் வரை, குறிப்பாக கெந்திங் சுரங்கப்பாதை மற்றும் கோம்பாக்கை உள்ளடக்கிய பகுதியும் அடங்கும். இது மிகவும் சவாலான பகுதியும் ஆகும் என்று சொன்னார்.
நேற்று இங்குள்ள பாசார் பாயாங்கில் கோலா திரங்கானு பஸ்.மை சேவை உருமாற்றத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
கிளந்தான் மற்றும் திரங்கானுவில் இ.சி.ஆர்.எல். முன்னேற்றம் கவலைப்படத்தக்க வகையில் இல்லை, ஏனெனில் அங்கு பெரும்பாலான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், பகாங்கில் நிலவிய கேபிள் திருட்டு பிரச்சனைகள் அது அந்தப் பகுதியில் இ.சி.ஆர்.எல். திட்டப் பணிகளின் சீரான மேம்பாட்டை பாதித்ததாக அவர் தெரிவித்தார்.
ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு கேபிள் திருடப்பட்டுள்ளது. அது மேம்பாட்டாளருக்கு ஒரு பிரச்சனையாக உள்ளது. செயல்முறையை விரைவுபடுத்த அவர்கள் தங்கள் அணுகுமுறையை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்.
இது குறித்து நான் உள்துறை அமைச்சுடனும் காவல் துறையுடனும் விவாதித்துள்ளேன். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க கடுமையான சட்ட விதிகளைப் பயன்படுத்துவது உட்பட இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இ.சி.ஆர்.எல். இரயில் திட்டப் பணிகள் 87 விழுக்காடு பூர்த்தி
23 செப்டெம்பர் 2025, 1:15 AM