பாரிட், செப். 22 - அலட்சியம் காரணமாக தனது இளைய இரண்டு மாத குழந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்ததை ஒப்புக்கொண்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2,000 வெள்ளி அபராதம் விதித்தது.
முப்பத்தாறு வயதான தேவிந்தா தெஃபாவுக்கு மாஜிஸ்திரேட் நூருல் இசலினா ராஜாய்
இத்தண்டனை விதித்தார். அபராதம் செலுத்தத் தவறினால் பிரதிவாதிக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இம்மாதம் 18 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் இங்கு அருகிலுள்ள கோதாதா செத்தியா, கம்போங் சுங்கை துவா, ஜாலான் சுங்கை ஜெஜாவியில் அர்கான் ஆண்ட்ரே சோவீல் அசிட் என்ற அக்குழந்தைக்கு எதிராக இக்குற்றத்தைப் புரிந்ததாக அம்மாது மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 304ஏ பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.
முன்னதாக, பொதுமக்களின் நலன்னை கருத்தில் கொண்டு உரிய தண்டனை வழங்குமாறு அரசு துணை வழக்கறிஞர் ராயா வான் முகமது அமீர்ல் நஜிப் வான் ஜூல்பிக்ரி கேட்டுக் கொண்டார்.
அம்மாதுவின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நூருல் சுயுஹாதா முகமது யூசோப், இது தனது கட்சிக்காரரின் முதல் தவறு என்று கூறி குறைந்த தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் கோரினார்.
இதற்கு முன்னர், இரண்டு மாதக் குழந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தபோது தனது தாயால் உடல் அழுத்தப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.