கோலாலம்பூர், செப் 22 - நாடு முழுவதிலும் உள்ள 50,000 டாக்சி, வாடகை கார் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் பயனடையும் வகையில் சுயதொழில் செய்பவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு (LINDUNG Kendiri) போக்குவரத்து அமைச்சு இவ்வாண்டு 35 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இந்த பங்களிப்புக்கான அரசாங்கத்தின் ஒதுக்கீட்டு விகிதம் 70 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு அமைப்பு பெர்கேசோ மூலமாக மனிதவள அமைச்சு அத்திட்டத்தை இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி அமல்படுத்தியதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
எஞ்சிய 30 விழுக்காடு பங்களிப்பை போக்குவரத்து அமைச்சு ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதி அமைச்சின் ஒதுக்கீடு இல்லாமல், சிறப்புப் பதிவு எண்கள், NPI ஏலங்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி, அந்த 35 லட்சம் ஒதுக்கீட்டுத் தொகையை தமது அமைச்சு செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பினாங்கு, செபெராங் ஜெயாவில் உள்ள பினாங்கு பெர்கேசோ அலுவலகத்தில் இரத்த சுத்திகரிப்பு மையத்தின் திறப்பு விழா மற்றும் Lindung Kendiri பாதுகாப்பு திட்டத்தை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் லோக் இதனை தெரிவித்தார்.
-- பெர்னாமா