கோத்தா திங்கி, செப். 22 - இன்று காலை கூலாய்-கோத்தா திங்கி சாலையின் 26வது கிலோமீட்டரில் நிகழ்ந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரு ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.
காலை 8.00 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 47 வயது பெண் ஓட்டிச் சென்ற டோயோட்டா வியோஸ் காரும் 37 வயது ஆடவர் செலுத்திய பெரோடுவா பெஸ்ஸா காரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டதாகக் கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் யூசோப் ஓத்மான் தெரிவித்தார்.
இந்த விபத்தின் விளைவாக உள்நாட்டினரான இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது என அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோத்தா திங்கி மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டன என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 20,000 முதல் 50,000 வெள்ளி வரை அபராதம் மற்றும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க தகுதி நீக்கம் செய்யப்படும்.
அனைத்து தரப்பினரின் பாதுகாப்பிற்காக சட்டங்கள் மற்றும் சாலை விதிமுறைகளை எப்போதும் கடைப்பிடிக்குமாறு யூசோப் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
கூலாய்-கோத்தா திங்கி சாலையில்கோர விபத்து - இரு ஓட்டுநர்கள் பலி
22 செப்டெம்பர் 2025, 9:30 AM