கோலாலம்பூர், செப். 22 - முதலாம் படிவ மாணவியான ஸாரா கைரினா மகாதீரின் வழக்கு தொடர்பாக வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் வெளியிட்ட அறிக்கையின் ஒவ்வொரு பகுதியையும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் (ஏஜிசி) விரிவாக ஆய்வு செய்து வருகிறது.
இந்த ஆய்வு முற்றுப்பெற்றவுடன்
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவது உட்பட சட்டத்தின் கீழ் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அலுவலகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.
இம்மாதம் 20 ஆம் தேதி 'ஜெலாஜா இன்ஸ்பிரசி டிஎஸ்எஸ்ஏ பி187 கினாபாத்தாங்கன்' எனும் நிகழ்வின் போது முகமது ஷாபி தெரிவித்த கருத்துக்களைத் நாங்கள் கடுமையாக கருதுகிறோம்.
இதுபோன்ற அறிக்கைகள் பொதுமக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்கும் அபாயத்தை கொண்டிருக்கின்றன. மேலும் நடந்துகொண்டிருக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளின் சுமூகமான மேம்பாடுகளை அது சீர்குலைக்கக்கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடக்கூடிய எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவோ அல்லது நடவடிக்கைகளை எடுக்கவோ வேண்டாம் என்று அந்த அலுவலகம் மீண்டும் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.
முன்னதாக, ஒரு இரவு விருந்து நிகழ்வின் உரையாற்றிய போது விசாரணை நடவடிக்கைகள் நீண்ட காலம் எடுப்பது குறித்து ஷாபி கேள்வியெழுப்புவதை சித்தரிக்கும் காணொளி வைரலானது,
கோத்தா கினாபாலுவின் ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஜாரா கைரினா ஜூலை 17 ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் அதே நாளில் சிபித்தாங்கில் உள்ள தஞ்சோங் உபி முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
அதற்கு முதல் நாள் அதிகாலை 4.00 மணியளவில் பாப்பாரில் உள்ள பள்ளி விடுதியில் உள்ள வடிகால் அருகே மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்க சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்டது. பின்னர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அவரது மரணம் குறித்த விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.