மணிலா, செப். 22 - சூப்பர் தைப்பூன் ரகாசா சூறாவளி வடக்கு லுசோனை நோக்கி நகர்வதால் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் கனமழையை கருத்தில் கொண்டு பிலிப்பைன்ஸ் அரசு இன்று மணிலா நகர் மற்றும் நாட்டின் பெரும்பகுதிகளில் வேலை மற்றும் வகுப்புகளை நிறுத்தி வைத்தது.
நாட்டின் தொலைதூர பாபுயன் தீவுகளில் மிக உயர்ந்த சூறாவளி எச்சரிக்கையை வானிலை அதிகாரிகள் வெளியிட்டனர்.
புயல், உயர் அலைகள் மற்றும் வெள்ளப்பெருக்குக்கு சாத்தியம் கருதி தாழ்வான மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களை விரைந்து வெளியேறுமாறு அது வலியுறுத்தியது
காற்று அதிகபட்சமாக மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்திலும் புயல் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரகாசா சூறாவளி லூசோன் நீரிணையைக் கடப்பதற்கு முன்பு நண்பகலில் பாபுயன் தீவுகளைக் கடந்து கரையைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி தைவானை நேரடியாகத் தாக்காது என்றாலும் சூறாவளியின் தாக்கம் தீவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிழக்கு கடற்கரையில் கனமழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைவான் அரசு தரை மற்றும் கடல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளதோடு டைடுங் மற்றும் ஹுவாலியன் உள்ளிட்ட கிழக்கு நகரங்களுக்கான விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.
பின்னர் புயல் தெற்கு பக்கம் நகர்ந்து சீனாவின் கடற்கரையை நோக்கி வீசும்போது ஹாங்காங் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளில் இல்லாத வலிமையான சூறாவளிகளில் ஒன்றை எதிர்கொள்ளத் தயாராகுமாறு குடியிருப்பாளர்களை ஹாங்காங் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் விமான நிலையத்தை 36 மணி நேரம் மூடுவது குறித்து பரிசீலித்து வருவதாக ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.