கோலாலம்பூர், செப். 22: சபாவில் வெள்ள நிலைமை மேம்பட்டு வரும் நிலையில் பெனாம்பாங் மற்றும் பாப்பார் பகுதிகளில் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் மட்டுமே இன்னும் செயல்பாட்டில் உள்ளன.
இன்று காலை நிலவரப்படி வெள்ளத்தில பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
பாப்பாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு பேராக மட்டுமே உள்ளது. பெனாம்பாங்கில் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாப்பாரிலும் பெனாம்பாங்கிலும் தலா இரண்டு கிராமங்கள் மட்டுமே இன்னும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டதாக அத்துறை அறிவித்துள்ளது.
சரவாக் மாநிலத்தின் மிரியில் உள்ள மருடி சமூக மையத்தில் இன்று காலை ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தங்கியிருக்கின்றனர்.
இதற்கிடையில், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் பொது தகவல் வெள்ள வலைத்தளத்தின் தரவுகளின்படி லாங் தெரு நிலையத்தில் நதியின் நீர்மட்டம் இன்று காலை 8.47 மீட்டராக உள்ளது. நேற்று மாலை இதன் அளவு 8.69 மீட்டராக இருந்தது
மருடி நிலையத்தின் நீர்மட்டம் நேற்று 4.12 மீட்டராக இருந்த நிலையில் தற்போது 3.92 மீட்டராக உயர்ந்து அபாய அளவான 3.25 மீட்டரைத் தாண்டியுள்ளது.
சபாவில் வெள்ளம் தணிகிறது - இரு நிவாரண மையங்கள் மட்டும் திறப்பு
22 செப்டெம்பர் 2025, 4:49 AM