கோலாலம்பூர், செப். 22 - பூச்சோங், ஆயர் ஹீத்தாம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் முறையான அனுமதியின்றி நுழையும் சம்பவங்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஓப் ஜெஜாக் 2 நடவடிக்கையின் கீழ் நேற்று 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய சிலாங்கூர் மாவட்ட வன அலுவலகம், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் ற்றும் பூச்சோங் ஜெயா போலீஸ் நிலையத்தின் ஒத்துழைப்புடன சிலாங்கூர் மாநில வன இலாகாவின் அமலாக்கப் பிரிவு நேற்று காலை 11.00 மணியளவில் மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாரிட் அகமது கூறினார்.
அவர்கள் அனைவரும் 1985ஆம் ஆண்டு தேசிய வனச்சட்டத்தின் கீழ் முறையான அனுமதி இல்லாமல் பூச்சோங், புக்கிட் வாவசான் வழியாக அந்த வனப்பகுதிக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் சொன்னார்.
மேல் நடவடிக்கைக்காக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்கள் அனைவரும் சிலாங்கூர் மாநில வனத்துறையின் பிணையில் பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அனுமதின்றி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்த குற்றத்திற்காக 1985ஆம் ஆண்டு தேசி வனச் சட்டத்தின் 47வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த பாதுகாக்கப்பட்ட நிரந்தர வனப்பகுதி மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் வன கல்வித் துறையின் கற்றல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிக்குள் முறையான அனுமதின்றி நுழைய வேண்டாம் என்றும் பொது மக்களை அவர் வலியுறுத்தினார்.