கோத்தா ராஜா, 21 செப்டம்பர் 2025 – மலேசிய இந்திய சமூகத்தின் இளைஞர்களை முன்னிறுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் ஆதரவாக அரசு தொடர்ந்து எடுத்து வரும் முக்கியமான முயற்சிகளில் ஒன்றாக Nadi Aspirasi Nasional Bersama Anak Muda அல்லது சுருக்கமாக “நண்பா” (NANBA) திட்டம் திகழ்கிறது.
இந்தத் திட்டம், தகவல் தொடர்பு சமூகத் துறை (J-KOM) தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. “நண்பா” எனும் தமிழ்ச் சொல், அதாவது “நண்பன்”, நட்பு, ஒற்றுமை மற்றும் மக்களுடன் அரசின் இணைப்பை வலியுறுத்தும் சின்னமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது மக்களோடு அரசு நெருக்கமாகவும், உள்ளடக்கத்துடனும் செயல் படுகின்றது. நண்பா தொடரின் நான்காவது நிகழ்ச்சி இன்று கோத்தா ராஜாவில் நடைபெற்றது. இதை அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைத்தார் KASIH மலேசியாவின் தலைவர் டத்தோ’ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா பிந்தி டாக்டர் வான் இஸ்மாயில்.
இந்நிகழ்ச்சி J-KOM, KASIH மலேசியா மற்றும் கோத்தா ராஜா நாடாளுமன்ற அலுவலகம் ஆகிய மூன்று தரப்புகளின் ஒத்துழைப்பில் சிறப்பாக நடத்தப்பட்டது.
இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் மலேசிய இந்திய சமூக இளைஞர்களை தன்னம்பிக்கை உடையவர்களாகவும், திறமைகளை மேம்படுத்தியவர்களாகவும், சமுதாயத்தில் போட்டித்திறன் கொண்டவர்களாகவும் வளர்ப்பதாகும்.
மேலும், அரசின் பல்வேறு முயற்சிகள், கொள்கைகள் மற்றும் புதிய வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் இளைஞர்களுக்குச் சென்றடையச் செய்வதிலும் இந்த நிகழ்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
J-KOM வெளியிட்ட அறிக்கையில், இந்த நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோள்கள் மூன்றாக வலியுறுத்தப் பட்டுள்ளன. முதலில், இந்திய இளைஞர்களுக்கு தனி வளர்ச்சி, சமூகத் திறன் மற்றும் அரசின் கொள்கைகள் குறித்து விழிப்புணர்வு பெறுவதற்கான தளத்தை உருவாக்குவதே ஆகும்.
இரண்டாவது, அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டங்கள், நன்மைகள் மற்றும் வாய்ப்புகள் இளைஞர்களுக்கு முழுமையாகக் கிடைக்கச் செய்வதற்கு முயற்சி செய்யப்படுகிறது.
மூன்றாவது, சமூகத்தில் பரவி வரும் எதிர்மறை செயல்கள் மற்றும் பழக்கவழக்கங்களைத் தடுக்கவும், அறிவார்ந்த மற்றும் ஒழுக்கம் மிக்க தலைமுறையை உருவாக்க உதவுதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.