மாராங், செப் 21 – மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) கிழக்கு கரை ரயில் திட்டம் (ECRL) கெர்தே தளத்தில் நடைபெற்ற பெட்ரோனாஸ் கேஸ் பெர்ஹாட் (PGB) எரிவாயு குழாய் கசிவு சம்பவம் கட்டுக்குள் இருப்பதுடன், அது பொதுமக்களின் உடல்நலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்று JBPM பொதுத்தலைவர் டத்தோ’ ஸ்ரீ நோர் ஹிஷாம் முகமது உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. அதில், சம்பவ இடத்திற்கு செல்லும் சாலையை மூடுவதும், மேலும் எந்தவித தீப்பொறி ஏற்படாமல் தடுக்க அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்துவதும் அடங்கும்.
மேலும், இந்தச் சம்பவம் பொதுமக்களுக்கு எந்த உடல்நல பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் உறுதி கூறினார். காரணம், அந்த இடம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து தூரமாக அமைந்துள்ளது.
எனினும், பியூட்டேன் வாயு காற்றுடன் குறிப்பிட்ட அளவில் கலந்து விட்டால் தீப்பற்றி எரியும் அபாயம் அதிகம் உள்ளது என அவர் எச்சரித்தார். இந்த கசிவு ஏற்பட்ட இடம் முக்கிய சாலையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அது அருகில் உள்ள கிராமங்கள் அல்லது குடியிருப்புப் பகுதிகளை பாதிக்கவில்லை.