ஷா ஆலாம், 21 செப்டம்பர்: சிலாங்கூர் மாநில வேளாண் மேம்பாட்டுக் கழகம் (PKPS) மற்றும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) இணைந்து நடத்தும் ஜூவலான் எஹ்சான் ரஹ்மா (JER) விற்பனைத் திட்டம் இன்று எட்டு இடங்களில் தொடரப்படுகிது.

சிலாங்கூர் பட்ஜெட் 2025-இல், JER திட்டத்திற்கு RM 30 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் 10 எஹ்சான் மார்ட் கிளைகளைத் திறப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் கிளைகள் தற்போது சுங்கை துவா, பண்டான் இண்டா ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன, மேலும் உலு கில்லானில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
PKPS நிர்வகிக்கும் இந்த மார்க்கெட்டில், அடிப்படை பொருட்கள் சந்தை விலையை விட 10 முதல் 15 சதவீதம் குறைவாக விற்கப்படுகின்றன. JER திட்டத்தை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட எஹ்சான் மார்ட், 2027க்குள் 56 DUN பகுதிகளில் விரிவுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு உள்ளது.
முன்பு, JER திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக PKPS தரமான மேலாண்மை விருது பெற்றது. மேலும், மலேசிய சாதனை புத்தகத்தில் மிகப்பெரிய சலுகை விற்பனை நிகழ்வை நடத்திய அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது.