பட்டர்வொர்த், செப் 20- நாடு முழுவதும் 50,000 டாக்சி, வாடகை கார் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் பயனடையும் வகையில் சுயதொழில் செய்பவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு (LINDUNG Kendiri) போக்குவரத்து அமைச்சு இவ்வாண்டு 35 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு 70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளையில்
மீதமுள்ள 30 சதவீதத்தை போக்குவரத்து அமைச்சு நிதியுதவி செய்யும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த திட்டம் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (சொக்சோ) மூலம் மனிதவள அமைச்சினால் 2025 ஜனவரி 1 முதல் செயல்படுத்தப் படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சின் ஒதுக்கீடுகளுக்குப் பதிலாக சிறப்புப் பதிவு எண் ஏல விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி 35 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டை வழங்க போக்குவரத்து அமைச்சு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை எடுத்ததாக அவர் விளக்கினார்.
போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்ட வருடாந்திர பட்ஜெட்டில் இந்த நோக்கத்திற்கு (சுய பாதுகாப்பு) எந்த ஒதுக்கீடும் இல்லை. இருப்பினும், இந்த 35 லட்சம் வெள்ளியை ஈடுகட்ட ஒரு வழியை நாங்கள் யோசித்து வருகிறோம். அது சிறப்பு எண் பட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்துவதாகும் என்று அவர் கூறினார்.
இன்று செபராங் ஜெயாவில் உள்ள பினாங்கு சொக்சோ அலுவலகத்தில் நடைபெற்ற செபராங் ஜெயா சொக்சோ டயாலிசிஸ் மையத்தின் திறப்பு விழா மற்றும் தனிநபர் பாதுகாப்பு நிதியுதவி வழங்கும் விழாவிற்குப் தலைமையேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
நாடு முழுவதும் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சுமார் 35,000 டாக்சி அல்லது வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் 15,000 பள்ளி பேருந்து ஓட்டுநர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று லோக் கூறினார்.
50,000 டாக்சி, வாடகைக்கார், பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பு திட்டம்
20 செப்டெம்பர் 2025, 12:37 PM