கோத்தாபாரு, செப். 20- சுமார் 13.5 மில்லியன் பாட் (வெ.18 லட்சம்) மதிப்புள்ள 450,000 யாபா மாத்திரைகளை மலேசியாவிற்கு கூரியர் எனப்படும் பொருள் பட்டுவாடா சேவை மூலம் கடத்தும் முயற்சியை தாய்லாந்து அதிகாரிகள் நேற்று வெற்றிகரமாக முறியடித்தனர்.
கூரியர் நிறுவனம் மூலம் எல்லை நகருக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது தொடர்பில் கிடைத்த உளவுத் தகவலின் விளைவாக இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக சுங்கை கோலோக் போதைப் பொருள் நிர்வாக மையத்தின் தலைவர் சுபியன் டேமோக்லெங் தெரிவித்தார்.
போதைப்பொருள் அடங்கிய பொட்டலத்தை எடுக்க வரும் சந்தேக நபரைக் கண்டறிய தனது குழுவினர் அதிகாலையில் இருந்து இரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், யாரும் அங்கு வரவில்லை. அனைத்து போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக சுங்கை கோலோக் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
சுங்கை கோலோக் சட்டவிரோத வழித்தடம் வழியாக மலேசியாவிற்குள் போதைப்பொருள் கடத்தப்பட்டதாக நம்பப்படுவதாகவும் ஒவ்வொரு மாத்திரையும் சுமார் 30 பாட் என்ற விலையில் சந்தையில் விற்கப்படுவதாகவும் சுபியன் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை நராதிவாட் பிராந்திய ஆளுநர் லெப்டினன்ட் முடா டிராகுல் தோதமின் உத்தரவின் பேரில் சுமார் பிற்பகல் 2.00 மணியளவில் (மலேசிய நேரப்படி பிற்பகல் 3 மணி) நடைபெற்றது.
மலேசியா பெரும்பாலும் கடத்தல் கும்பல்களின் இலக்காக இருப்பதால் போதைப்பொருள் மலேசியாவிற்குள் நுழைவதைத் தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கு தனது தரப்பு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்
450,000 யாபா மாத்திரைகளை நாட்டிற்குள் கடத்த முயற்சி!
20 செப்டெம்பர் 2025, 11:55 AM