இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியது- உணவக உரிமையாளர் படுகாயம்
ஈப்போ, செப். 20- இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் வலது கை சிக்கியதில் ஒரு உணவக உரிமையாளர் பலத்தக் காயமடைந்தார். இச்சம்பவம் இங்குள்ள சிமோர், ஜாலான் சிலாங் 3, உள்ள ஒரு வளாகத்தில்
நேற்றிரவு நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பில் இரவு 8.17 மணிக்கு ஒரு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து மேரு ராயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் ஷாஸ்லின் முகமது ஹனாபியா தெரிவித்தார்.
சம்பவ இடத்தில், அந்த 41 வயது நபரின் கை இன்னும் இயந்திரத்தில் சிக்கியிருப்பதை உறுப்பினர்கள் கண்டனர். எனினும், பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருந்தார். மீட்பு நடவடிக்கையின் போது போது பாதிக்கப்பட்டவருக்கு வலி ஏற்பட்டதால் அவருக்கு மயக்க மருந்து கொடுக்க சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவின் உதவி தீயணைப்புத் துறைக்கு
தேவைப்பட்டது.
மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் மருத்துவக் குழுவின் உதவியைப் பெற சுமார் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி இயந்திரத்தின் அடிப்பகுதியைத் திறந்து அரைக்கும் கியரை எதிர் திசையில் திருப்புவதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் கையை தனது குழு அகற்றியது என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் வலது கையில் நான்கு விரல்களில் பலத்த காயம் காணப்பட்டது. மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அவ்வாடவர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர் சொன்னார்.
இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியது- உணவக உரிமையாளர் படுகாயம்
20 செப்டெம்பர் 2025, 4:22 AM