ஜோர்ஜ் டவுன், செப். 20- தாய்லாந்து நாட்டவர்களால் செலுத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உள்நாட்டு 'சி' பிரிவு மீன்பிடி படகுகளை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் (மரிட்டிம் மலேசியா) பினாங்கு மாநிலப் பிரிவு நேற்று முன்தினம் மாலை மாநில கடல் பகுதியில் தடுத்து வைத்தது.
மாநில மீன்வளத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு நாள் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இவ்விரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பினாங்கு கடல்சார் இயக்குநர் கேப்டன் முகமது சுஃபி முகமட் ரம்லி கூறினார்.
மாநில கடல்சார் நடவடிக்கைகளுக்கான துணை இயக்குநர் கடல்சார் தளபதி முகமது ஹாஷிம் மட் ஜைன் தலைமையில் கடல் மற்றும் தரை என இரண்டு கட்டங்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அவர் சொன்னார்.
கடலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இரண்டு படகுகளும் தடுத்து வைக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 40 முதல் 56 வயதுக்குட்பட்ட தாய்லாந்து நாட்டினரால் அந்த படகுகள் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
அந்தப் படகில் கிட்டத்தட்ட மூன்று டன் மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தரை மார்க்க நடவடிக்கையில் கோலா மூடா, பெனாகா மற்றும் பத்து கவான் மீன்பிடி படகுத் துறை சுற்று வட்டாரத்தில் 23 மீன்படி பொறிகளை தனது தரப்பினர் கைப்பற்றியதாக முகமது சஃபி மேலும் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 1985 ஆம் ஆண்டு மீன்பிடிச் சட்டத்தின் 8(பி)வது பிரிவு மற்றும் 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.