சுபாங் ஜெயா, செப். 20- புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட தாமான் புத்ரா ஹார்மோனி மற்றும் கம்போங் கோல சுங்கை பாருவில் உள்ள வீடுகளின் பழுது மற்றும் புனரமைப்பு பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன.
தாமான் புத்ரா ஹார்மோனியில் உள்ள 79 வீடுகள் மறுநிர்மாணிப்பு செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அவற்றில் 49 வீடுகளின் உரிமையாளர்கள் மறு நிர்மாணிப்புக்கு ஒப்புக் கொண்டனர். மற்ற 30 உரிமையாளர்கள் சில காரணங்களுக்காக மறுத்துவிட்டனர் என அவர் சொன்னார்.
அது அவர்களின் உரிமை. ஆனால் மாநில அரசு இன்னும் ஒற்றுமை அரசாங்கத்தின் கருணை அடிப்படையில் உதவியை வழங்கி வருகிறது. எழுப்பப்பட்ட பல பிரச்சினைகள் உடனடி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கம்போங் கோல சுங்கை பாருவில் மறுகட்டமைப்பு திட்டத்தை ஆய்வு செய்த பிறகு அவர் கூறினார்.
அதே நேரத்தில், மிதமான பாதிப்பை எதிர்கொண்ட 120 வீடுகள் 30,000 முதல் 60,000 வெள்ளி செலவில்
பழுதுபார்க்கப்பட்டு வருவதாக அமிருடின் குறிப்பிட்டார்.
இதுவரை, 86 வீட்டு உரிமையாளர்கள் மொத்தம் 39 லட்சம் வெள்ளி மதிப்புள்ள நிதிக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதில் 26 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 61 வீடுகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகை அக்டோபர் மாத இறுதிக்குள் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.